
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என அழகிரி கூறியுள்ளார். இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று பேட்டியளித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலினுக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
அதேபோல் பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என கோபத்துடன் கேள்வி எழுப்பினார். பிறகு திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.