
அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும் எனவும் அவற்றில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 19ம் தேதி அறிவித்து அதற்கு மறுநாளான 20ம் தேதியிலிருந்து பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது. சுமார் 50%லிருந்து 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் அரசு திணறுகிறது. இதற்கிடையே நேற்று, தமிழக அரசு சார்பில் இலவச பஸ்பாஸ் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் சலுகை அப்படியே தொடரும். பேருந்து கட்டண உயர்வால் இலவச பஸ் பாஸ்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. அதே நேரத்தில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50% கட்டண சலுகையுடன் பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டும் கூட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.