
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 19ம் தேதி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு, 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சுமார் 50 முதல் 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்கள், கொடுத்த அழுத்தங்களின் காரணமாக பேருந்து கட்டணத்தை சிறிய அளவில் அரசு குறைத்தது. ஆனால், பெயரளவுக்கு கண் துடைப்பாகவே பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
தனியார் பேருந்து பக்கம் திரும்பிய பயணிகள்:
கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளில் 8 கோடி ரூபாய் அதிக வருவாய் கிடைத்ததாக அரசு கூறியது. ஆனால், தரமற்ற பராமரிப்பற்ற அரசு பேருந்துகளுக்கு இந்த கட்டணம் உயர்வு என்று கருதிய மக்கள், அரசு பேருந்துகளை புறக்கணித்துவிட்டு, தனியார் பேருந்துகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
லாபத்தை வாரி குவித்த தனியார் பேருந்துகள்:
இதை தனியார் பேருந்துகளும் சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். அரசு பேருந்துகளில் சராசரியாக 60% கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகள், சுமார் 30% மட்டுமே கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை இயக்கி லாபம் பார்த்தனர். ஆம்னி பேருந்துகளோ கட்டணத்தை உயர்த்தாமல் பழைய கட்டணத்திலேயே பேருந்துகளை இயக்கி பயணிகளை கவர்ந்தனர்.
எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை:
இதனால் வழக்கமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அரசு பேருந்துகளில் தினமும் சுமார் 2.2 கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது சுமார் 10% பேர் அரசு பேருந்தை புறக்கணித்ததால் அரசு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. இதனால் அரசுக்கு கூடுதலாக அழுத்தம் அதிகரித்தது.
அதனால்தான் பேருந்து கட்டண குறைப்பு என்ற பெயரில் சிறிய அளவில் பேருந்துகட்டணத்தை அரசு குறைத்துள்ளது. இந்த கட்டண குறைப்பு மூலம் இழந்த பயணிகளை மீண்டும் பெற முடியும் என அரசு நம்புகிறது.
கட்டண உயர்வை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்?
கட்டண உயர்வின்போது, மின்வாரியத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பது போல், அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதன்பிறகு, நீதிபதியை தலைமையாகக் கொண்டு செயல்படும் குழுவை அமைத்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.