பாஜக கேட்கும் முக்கியமான 10 தொகுதிகள்... அதிர்ச்சியில் அதிமுக..! விழிபிதுங்கும் எடப்பாடி!

By Asianet TamilFirst Published Feb 6, 2019, 9:58 AM IST
Highlights

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் பாஜக 10 தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் பாஜக 10 தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

பாஜகவோடு கூட்டணி அமைக்க தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. வரும் 10-ம் தேதி திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி இதை முறைப்படி அறிவிப்பார் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. பாஜக தங்களுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணைத்துள்ளது. 

இதன்படி புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய சிறு கட்சிகளும் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பெற உள்ளன. அதிமுகவிடம் இந்தச் சிறுகட்சிகளுக்கும் சேர்த்து தொதிகளை பாஜக கேட்டுவருகிறது. இதன் காரணமாகவே 10 முதல் 12 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாக பாஜக வட்டாரங்களில் சொல்கிறார்கள். 

கடந்த முறை பாஜக 7 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறையும் 7 முதல் 9 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக தமிழக பாஜக நிர்வாகிகள் போட்டியிட வசதியாக, அவர்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுகவிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி  தென்சென்னை, சிவகங்கை, நெல்லை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய பட்டியல் பாஜகவுக்காக அதிமுகவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவைதவிர இந்திய ஜனநாயக கட்சிக்காக பெரம்பலூர், புதிய நீதிக்கட்சிக்காக வேலூர்,  புதிய தமிழகம் கட்சிக்காக தென்காசி ஆகிய தொகுதிகளையும் பாஜக கேட்டிருக்கிறது. சிறு கட்சிகளை தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிட வைக்கும் முயற்சியிலும் பாஜக ஈட்டுபட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வழியாக குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடுவதில் பாஜக குறியாக இருக்கிறது. அதே வேளையில் இந்தத் தொகுதிகளைப் பிரித்துக்கொடுப்பதில் அதிமுகவில் தயக்கம் நிலவிவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்சென்னை, நெல்லை, திருப்பூர், ராமநாதபுரம், பெரம்பலூர், வேலூர் போன்ற தொகுதிகளைத் தருவதில் அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. 

குறி வைத்து பாஜக தொகுதிகளை கேட்பதால், அதிமுக தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிவரும் அதிமுகவினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கேட்கும் தொகுதிகளைக் கொடுத்தால், பிரச்சினை வரும் என்பதால்தான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்தக் கூட்டத்தில் பாஜக கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, மற்றும் தொகுதிகளின் பட்டியல் பற்றி விவாதித்து முடிவு எடுக்க அதிமுக முடிவு செய்துவிட்டது. மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாவட்ட செயலாளர்களைச் சமானாதப்படுத்தவும் ஓபிஎஸ்-இபிஎஸ் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்படி இருந்தாலும் இந்தத் தொகுதிகளைப் பெறுவதில் பாஜக தீவிர முனைப்பு காட்டிவருகிறது. தற்போதிய நிலையில், பிரதமரின் வருகைக்குப் பிறகு அதிகாரபூர்வமாக நடக்கும் பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்யலாம் என இரு தரப்பும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. 

click me!