மாரிதாஸ் மீது குண்டர் சட்டம்.. ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.. என்ன நடந்தது ?

By Raghupati RFirst Published Dec 12, 2021, 1:15 PM IST
Highlights

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி யூ டியூபர் மாரிதாஸ் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தீவிர வலதுசாரி ஆதரவாளராக கருதப்படும் இவர் திமுகவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றால் தற்போது கைதாகி உள்ளார். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிளைச் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் நிலையில் நேற்று மாலை அவர் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டு அதில் அவர் கைதும் செய்யப்பட்டார். மாரிதாசின் கைதுக்கு கண்டனத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகள், வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தள உலகில் அறிமுகமான  மதுரையில் மாரிதாஸ் டிசம்பர் 9ஆம் தேதி மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது கடந்த ஆண்டு நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் வினய் சவராகி கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேற்று (டிசம்பர் 11) மாரிதாஸை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதுபோல மாரிதாஸ் மீது இருக்கும் வழக்குகளை ஒருங்கிணைத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று தகவல் வருகிறது. இதுகுறித்து அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.

திமுக மீது குற்றம் சுமத்தும் வலதுசாரி ஆதரவாளர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். இதனை தடுக்கவே ஆளுநரை இன்று சந்தித்தார் அண்ணாமலை. கிஷோர் கே ஸ்வாமி,கல்யாணராமன் என்ற வரிசையில் தற்போது மாரிதாஸ் வந்திருக்கிறார். இந்த நிலையில் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்வதைத் தடுக்க விரும்புகிறார் அண்ணாமலை. இதற்காகவே அவர் ஆளுனரை சந்தித்து கூறினார். இதுமட்டுமின்றி திமுக ஆட்சியின் முறைகேடுகள், அமைச்சர்களின் ஊழல் பற்றிய பட்டியல் என்று பல்வேறு புகார்களை ஆளுனரிடம் கொடுத்து இருக்கிறார். மாரிதாஸ் மீது குண்டர் சட்டம் வராது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் அண்ணாமலையிடம் தெரிவித்தார்’ என்று கூறுகின்றனர்.

click me!