தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணி..? எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி

By karthikeyan VFirst Published Oct 9, 2020, 2:32 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜக, திமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூட வாய்ப்பிருப்பதாக, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தென்மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் நடக்கவுள்ள நிலையில், இப்போதே கூட்டணி குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன.

இந்தியாவில் மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் அல்லது ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு, எல்லா காலக்கட்டத்திலும் சவாலாக இருந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் காலூன்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, கடந்த சில ஆண்டுகளாக அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 திராவிட கட்சிகளும் வலுவான கட்டமைப்புகளுடன், அசைக்கமுடியாத மாபெரும் சக்திகளாக திகழ்வதால், பாஜக தேசிய கட்சியாகவும், பல மாநிலங்களின் ஆளுங்கட்சியாகவும் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே செயல்பட வேண்டிய நிலையில் தான் உள்ளது. பாஜகவை தவிர்த்துவிட்டு தமிழக அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை எட்டிவிட்டாலும், தனித்து நின்று வெல்லக்கூடிய அளவிற்கான செல்வாக்கு பாஜகவிற்கு இல்லை என்பதே நிதர்சனம்.

அந்தவகையில், கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 2019 மக்களவை தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. இப்போதும் அதிமுகவுடனான கூட்டணியிலேயே உள்ளது.

ஆனால், அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக - பாஜக தலைவர்களின் அண்மைக்கால கருத்துகள், அந்த கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என பாஜக தமிழக தலைவர்கள் கூறிவருகின்றனர். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக அங்கம் வகிக்கும் கட்சிதான் ஆட்சியமைக்கும். அது அதிமுகவாக இருக்கலாம் அல்லது திமுகவாகவோ வேறு எந்த கட்சியாக கூட இருக்கலாம் என்று கூறியது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நீட் தேர்வு, மும்மொழி கல்வி கொள்கை, புதிய வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு ஆகிய சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பதுடன், பாஜக  - அதிமுக எதிர்ப்பு அரசியலையே பிரதானமாக  தமிழகத்தில் செய்துவரும் கட்சி திமுக.

அப்படியிருக்கையில், திமுகவுடன் கூட பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? அது நடக்குமா? என்பது பெரும் கேள்வியாக இருப்பதுடன், பாஜக கூட்டணி குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே, பாஜகவின் புதிய தேசிய பொதுச்செயலாளரும் தென்மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

ஏசியாநெட் ஆங்கில இணையதளத்துக்கு(Asianet Newsable) சி.டி.ரவி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக இன்னும் வலுவடையவில்லை; இன்னும் கூட்டணியில் தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில், பாஜகவின் நிரந்தர கூட்டணி கட்சி அதிமுக தானா? அல்லது திமுகவுடனான கூட்டணி குறித்தும் பரிசீலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சி.டி.ரவி, கர்நாடகாவிலும் பாஜகவிற்கு இதேபோன்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. கர்நாடக மக்கள் ஜனதா தளத்திற்கும் காங்கிரஸுக்கும் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் நிலைமை மாறி, இப்போது பாஜகவிற்கு ஆதரவளிக்கிறார்கள். அதேபோன்ற நிலை தமிழகத்திலும் வரும். நாங்கள் எங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளும் பட்சத்தில், பலன்களை அறுவடை செய்ய முடியும். தேசத்தின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பாஜக, கூட்டணி கதவை திறந்தே வைத்திருக்கிறது. திறந்த சிந்தனையுடன், கூட்டணிக்கான வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருக்கிறோம் என்றார்.

எனவே தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட பாஜக கூட்டணி அமைக்க தயாராகவே இருக்கிறது என்பது தெரிகிறது.
 

click me!