இடைத் தேர்தலிலேயே அதிமுக – பாஜக கூட்டணி !! திருப்பரங்குன்றம் தொகுதி பாஜகவுக்கு !! வேட்பாளர் எச்.ராஜா ? அமித்ஷாவின் அதிரடி பிளான் !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 7:13 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் வரை இழுத்துக் கடத்தாமல் வரும் இடைத் தேர்தலிலேயே கூட்டணி அமைப்பது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜாவை வேட்பாளராக நிறுத்துவது என்றும் அதிமுக-பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்று பாஜக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறது. அனால் ஒன்றும் நடக்கவில்லை. ஜெ மறைவுக்குப் பிறகு எடப்பாடி அரசை கைக்குள் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. அதிமுகவினர் சற்று மீறும் போதெல்லாம் ரெய்டு விட்டு அடக்கி வைக்கும் வித்தையை பாஜக மிகச் சரியாக கையாண்டு வருகிறது.

அதே நேரத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்று தெரிந்ததும், திமுகவுடன் ஒட்டிக் கொள்ளவும் முயற்சி நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இனி அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை.

சரி அமமுக வை சரி கட்டலாம் என்றால், பாஜக சொற்படி ஆட டி.டி.வி.தினகரன் தயாராக இல்லை. அவருக்குப் பின்னால்தான் நாம் செல்ல வேண்டும் என்பதை பாஜக நன்கு புரிந்து வைத்துள்ளது. இப்படி பல பக்கம் முட்டி மோதி தற்போது மீண்டும் அதிமுகவிடமே வந்துள்ளது பாஜக.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியில் திருப்பதி விசிட், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியின் டெல்லி சந்திப்பு என தொடர்ந்து கடந்த 15 நாட்களாகவே சமரசப் படலம நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்லையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரை இழுத்துச் செல்லாமல் வரும் இடைத் தேர்தலிலேயே கூட்டணி வைத்து போட்டியிடலாம் என இரு தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பரங்குன்றம்  தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு, திமுகவும், அமமுகவும் கடுமையான டஃப் கொடுக்க போகிறது. ஏற்கனவே ஆர்.கே.நகரில் தோற்றுப் போனதுபோல் இங்கும் தோற்றுவிட்டால் கட்சி கையைவிட்டுப் போய்விடும் என அதிமுக கணக்குப் போடுகிறது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொகுதியை பாஜக பக்கம் தள்ளிவிட்டுவிட்டால் இப்பிரச்சனையில் இருந்து தப்பித்துவிடலாம் என எடப்பாடி குரூப் கணக்குப் போடுகிறது.

இதே போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால் இரு கட்சிக்குமான செல்வாக்கை அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நாடாளுமன்றத்  தேர்தலை சந்திக்கலாம் என்பது அமித்ஷாவின் கணக்கு.

இப்படி அரு கட்சிகளின் கணக்குதான் தற்போது கூட்டணியில் முடிந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட தயாராகி வருகிறார். செண்ட்டிமென்டாக திருப்பரங்குன்றம் தங்களுக்கு உதவும் என்றும் பாஜக நம்புகிறது.

click me!