மதத்தின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதா..? வேல் யாத்திரைக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக..!

By Asianet TamilFirst Published Nov 16, 2020, 8:27 AM IST
Highlights

மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு கட்சி பத்திரிகை மூலம் அதிமுக பதில் அளித்துள்ளது.
 

கொரோனா பரவலை காராணம் காட்டி வேல் யாத்திரை தடை செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதனையடுத்து யாத்திரை செல்ல தினந்தோறும் முயலும் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை தமிழக காவல் துறை செய்துவருகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவினரின் கோபம் அதிமுக மீது திரும்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். 
இந்நிலையில், ‘வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும்’ என்று சொன்ன பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக கட்சி பத்திரிகையான ‘நமது அம்மா’வில் ‘கருப்பர் கூட்டமானாலும் சரி காவிகொடி பிடிப்பவர்களானாலும் சரி’ என்ற தலைப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.


அதில், “சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள் நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம்  தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ் நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்த மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவுகொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்துவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதிகொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும், அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.


இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும் அன்பையும் சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாங்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும். 
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையைய்யும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!