பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும்..!! அக்டோபர் 28 ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்குகிறது.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 1:38 PM IST
Highlights

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் தலைமையிலான கூட்டணி சுமார் 177 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.  ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் எதிரெதிர் துருவங்களான நிதிஷ் லாலு கூட்டணி ஆட்சியைக்  கைப்பற்றியது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களை கைப்பற்றி மகா கூட்டணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி வெறும் 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது,  பாஜகவை வீழ்த்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ,பரம எதிரியான  லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கைகோர்த்ததுடன் காங்கிரஸ் கட்சியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தேர்தல் எதிர் கொண்டது. இது மகா கூட்டணி என அழைக்கப்பட்டது. அதேபோல் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி கட்சி, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் சமதா ஆகிய கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை எதிர்கொண்டது. 

இந்நிலையில் எதிர்வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் ஷிராக் பாட்சா தலைமையிலான எல்ஜேபி கட்சியும் இணைந்துள்ளது. கூட்டணிக்கு நிதீஷ் குமார் தலைமை தாங்குவார் என பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநில சட்டப் பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், நவம்பர் 29ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இன்று பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளார் அதில்,  

சட்டப்பேரவைத் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.  கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும். வாக்கு கேட்டு வீடுவீடாக செல்பவர்கள் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறும். பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. போதிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ல் தேர்தல் நடைபெறும் மொத்தம் 31 ஆயிரம் வாக்கு பதிவு மையங்களில்  வாக்குப் பதிவு நடைபெறும். 

2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடைபெறும். 42 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறும், 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் தேர்தல் நடைபெறும், 33 ஆயிரம் வாக்கு பதிவு மையங்கள் மூலம் வாக்குப் பதிவு செய்யப்படும். வேட்புமனு தாக்கல்  ஆக்டோபர் 9 ஆம் தேதி துவங்கும், அக்டோபர் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். அக்டோபர் 17 ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் ஆகும். நவம்பர் 10 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவி க்கப்பட்டுள்ளது. 

பீகார் சட்டசபைக்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன என்பதும் இதில் 122 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஜனதா தள், பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!