திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு தடை ? அதிமுகவின் அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2018, 9:41 AM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி அரசு  திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, முடிவு செய்துள்ளது. . இந்த வழக்கு தொடரும் பட்சத்தில், தீர்ப்பு வரும் வரை, அத்தொகுதியில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு, தடை கேட்கவும், ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை தடுக்க, தி.மு.., வும், இவ்வழக்கில் மூக்கை நுழைக்கிறது.

கடந்த 2016  ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம்.சீனிவேல், பதவி ஏற்காமலேயே மரணமடைந்தார். அப்போது அந்த தொகுதிக்கு  நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ்; தி.மு.க., சார்பில், டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், போஸ் வெற்றி பெற்றார். தேர்தல் மனு தாக்கல் நேரத்தில், ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.


அதனால், ஏ.கே.போசுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரும் படிவத்தில், அவரால் கையெழுத்திட முடிய வில்லை. எனவே, ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அதில், தேர்தல் விதிமீறல் நடைபெற்றதாக, டாக்டர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்நிலையில்கடந்த மாதம் 20 ஏ.கே. போஸ் மரணம் அடைந்தார். அதனால், 'போசுக்கு பதிலாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் உள்ளவர்கள், 14 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்யலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம், 10ம் தேதி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இவ்வழக்கு, நாளை திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

கடந்த முறை, திமுக வேட்பாளர் சரவணன் தோல்விக்கு, ஆளுங்கட்சியின் பணபலம் தான் காரணம். தற்போது, எந்த தேதியில் இடைத்தேர்தல் வந்தாலும், தி.மு.க., வேட்பாளராக, சரவணனை மீண்டும் நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. சென்னை, ஆர்.கே. நகரை கோட்டை விட்டது போல, இந்த தொகுதியை விடாமல் கைப்பற்ற, கட்சி மேலிடம், தேர்தல் செலவை ஏற்க முன்வந்துள்ளது.


ஆனால் போஸ் வழக்கை நடத்துவதன் மூலம், ஜெயலலிதா கைரேகை உண்மையானது என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. எனவே, அ.தி.மு.க., தரப்பில், இவ்வழக்கில், இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

 

மனு ஏற்கப்பட்டு, விசாரணை தொடருமானால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கேள்விக்குறியாகி விடும். மேலும் இவ்வழக்கில் முடிவு தெரியும் வரை, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என, அ.தி.மு.க., தரப்பில், தடையுத்தரவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதனை மோப்பம் பிடித்து  தடுக்க, சட்ட ரீதியாக, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, தி.மு.க., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன்படி, போஸ் வழக்கில், தி.மு.க., தரப்பிலும், ஒரு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.கைரேகை வழக்கில் முடிவு தெரியும் வரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த, எக்காரணத்தை கொண்டும், தடை விதிக்க கூடாது என, உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது. தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த  நேரத்தில் எதற்கு இடைத் தேர்தல் என்றே நினைக்கிறாராம்.

click me!