திமுகவின் வெற்றியைத் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன... உஷாராக இருங்க என கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!

By Asianet TamilFirst Published Feb 26, 2021, 9:00 AM IST
Highlights

நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே விழிப்புடன் இருங்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் கொளத்தூர் தொகுதியில் பூத் ஏஜென்டுகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் களத்துக்கு பாக முகவர்கள் மிகவும் முக்கியம். நீங்கள் இல்லையென்றல் களத்தில் நாம் முழு வெற்றியை பெற்றிட முடியாது. அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அந்தக் களம் எப்படி அமைய வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றக்கூடியவர்கள், நீங்கள்தான். அனைத்து களப்பணியாளர்களும் பூத் முகவர்களும் திமுக சார்பில்  கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, இந்த முறை 234 தொகுதிகளிலும் முறைப்படுத்தி இது அமைத்து அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறோம்.


இதில் அதிகமான கவனத்தை எடுத்து, அதற்குப் பயிற்சி கொடுத்து, அதை முறைப்படுத்துகிறோம் என்றால் இன்றைக்கு நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வெறும் அதிமுகவாக இருந்தால் அதைத் தூக்கி போட்டுவிட்டு சென்று விடலாம். ஆனால், அதிமுகவுடன் சேர்ந்து மத்தியில் உள்ள பாஜக, ஊடகங்கள், மத்திய, மாநில அரசிற்கும் துணை புரியும் குறிப்பிட்ட சில அதிகாரிகள், குறிப்பிட்ட சில காவல் துறையினர் இவர்களெல்லாம் இன்றைக்கு பக்கபலமாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.
பொதுக்குழுவில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். ஆனாலும் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும், எவ்வளவுதான் அக்கிரமம் செய்தாலும், எவ்வளவுதான் ஊழல் செய்தாலும், அதிமுகவே ஆட்சியில் இருக்கட்டும். திமுக வந்தால், அக்கட்சியை தோற்கடிக்கவே முடியாது. தொடர்ந்து அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள் என்ற ஒரு பயம், அச்சம் இன்றைக்கு ஒரு சில குறிப்பிட்டவர்களுக்கு வந்துள்ளது.
அதனால்தான் திட்டமிட்டு வதந்திகளை ஊடகங்களில், பத்திரிகைகளில், சமூக வலைதளங்கள் மூலமாக செய்யும் பிரசாரங்களை நாம் பார்க்கிறோம். அதையெல்லாம் இன்றைக்கு முறியடிப்பதற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வந்திருக்கும் தொழில்நுட்பத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது ஒரு பக்கம் இருந்தாலும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது களப்பணியாளர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பாக முகவர்களாக, பூத் ஏஜெண்டுளாக இருக்கக்கூடியவர்கள் எவ்வளவு விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்கு எத்தனையோ தேர்தல்கள் உங்களுக்கு பாடம் கற்பித்து தந்திருக்கிறது. எனவே உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

click me!