நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது !  எப்போ திட்டத்தை தொடங்குவீங்க ? கொங்கு மண்டல விவசாயிகள் வேதனை ….

First Published Mar 15, 2018, 1:21 PM IST
Highlights
athikkadavu - avinasi programme fund allot


அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்  தமிழக அரசு 1789 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்திட்டத்துக்கு 4 முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இது வரை செயல்படுத்தாமல் ஏன் அரசு தாமதப்படுதிதுகிறது என கொங்கு மண்டல விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் மிக முக்கியக் கோரிக்கையாக, கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம். மூன்று மாவட்டங்களை சேர்ந்த 72 குளங்கள், 538 குட்டைகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் நீர் ஆதாரமாக இத் திட்டம் உள்ளது.

கோவை மாவட்டம் பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2000 கன அடி வெள்ள உபரி நீரை இந்த 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்புவதன் மூலம் நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்க முடியும்.

இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேறும். 1957-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் காமராஜரின் நண்பருமான மாரப்பகவுண்டர், சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். ஆனால், திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறக் கோரும் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 1900 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. விவசாயம் பொய்த்துபோய், தற்போது குடிநீருக்கே பெரும் திண்டாட்டம் நிலவுகிறது.

மத்திய அரசிடம் அனுமதி பெறாமால் பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் நிதி ஒதுக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு பொன்னையனும், 2011-ம் ஆண்டு கே.வி.ராமலிங்கமும் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கினார்கள். கடந்த அதிமுக அரசு 3-வது முறையாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் மூலம் நிதி ஒதுக்கியது.

தற்போது 4 ஆவது முறையாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு 1789 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன் இந்திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்திட்டத்துக்கு முதலில்  மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே ஆகிய துறைகளிடம் உரிய அனுமதி பெறவேண்டும். ஆனால் மாநில அரசு அப்படி செய்யாமல் இம்முறையும் நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு நிதி ஒதுக்கும் திட்டங்கள் மூலமும் இத்திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கலாம் என கொங்கு மண்டல விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யாமல் விரைவில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!