எலக்சனுக்குள்ள எல்லோரையும் ஒன்னு சேர்க்கனும்…. சசிகலாவுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கும் அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Nov 5, 2018, 8:34 PM IST
Highlights

அக்கு வேறாக ஆணி வேறாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்லுக்குள் எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், அதிமுக, பாஜக மற்றும் புதிய தமிழகம் என சில கட்சிகளை சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அமித்ஷா மூலம் சசிகலாவுக்கு அசைன்டெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல துண்டுளாக உடைந்தது. ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து வெளியே கொண்டு வந்து அக்கட்சியை கைப்பற்றி விடலாம் என பாஜக கணக்கு போட்டது.

ஆனால்  சசிகலாவோ தான் சிறைக்குப் போனாலும் வேறு யாரிடமும் ஆட்சி போய்விடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கி விட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து எடப்பாடியை கைக்குள்போட்டுக் கொண்ட பாஜக,  இபிஎஸ்- ஓபிஎஸ் இருவரையும் கைகோர்க்க வைத்தது. ஆனால் இதில் ஆத்திரமடைந்த டிடிவி தனியாக ஒரு கட்சி தொடங்கி அதிமுகவையே ஆட்டம் காண வைக்கிறார்.

தாங்கள் ஒன்று நினைக்க நடந்ததோ வேறு மாதிரியாக போய்விட்டதால் அதிர்ந்து போன பாஜக , திமுகவுக்கு நூல்விட்டு பார்த்தது. ஆனால் அதுவும் பலிக்காததால்,  மீண்டும்  அதிமுக பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது.

இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் இரு அணிகளையும், அதாவது இபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எப்படியாவது அதிமுகவை பசை போட்டு ஒட்டவைத்துவிடலாம் என நினைக்கிறது.

கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி அதற்கான அசைன்மெண்டை கொடுத்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி தனது மனைவி மூலம் கிருஷ்ணப்பிரியாவிடம் பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்துதான் அமித்ஷா தனது சிஷ்யர்கள் மூலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுக , பாஜக மற்றும் சில கட்சிகளை இணைத்து கூட்டணியை உருவாக்க அமித்ஷா போடும் கணக்கு இப்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. சசிகலாவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முடிந்தால் இதில் ரஜினியை சேர்க்கும் ஒரு வேலையை தனியாக ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன டி.டி.வி.தினகரன் மட்டும் இதற்கு முட்டுக்கட்டை போடாமல் இருக்க வேண்டும் என்பது தான் இப்போதைய பிரச்சனை..

click me!