திமுக வேட்பாளரிடம் மண்ணைக் கவ்விய அன்வர் ராஜா மகள் !! அதிமுக அதிர்ச்சி தோல்வி !!

By Selvanayagam PFirst Published Jan 2, 2020, 10:01 PM IST
Highlights

ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள்   அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதபியா  அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. 

முதல் கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஒரு சில இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆனால், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா  ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2- வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். 

ராவியத்துல் அதபியா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியைவிட 1,343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற சுப்புலெட்சுமி மண்டபம் ஒன்றிய திமுக செயலாளர் ஜீவானந்தத்தின் மனைவி..

அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டுள்ளார். இந்த வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதே போல்  நாமக்கல் மாவட்டம்  நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார்.

click me!