நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு எதிராக அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மிகக் கடுமையாக பேசியது பாஜக வை அதிர்ச்சி அடையச் செய்ததோ இல்லையோ கூட்டணி பேசிக் கொண்டிருக்கும் அதிமுகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதையடுத்து அன்வர் ராஜா பேசியது அவரது சொந்த கருத்து என பேட்டி கொடுக்கும்படி நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் வேணு கோபாலை எச்சரித்துள்ளார்.
முத்தலாக் தடைச் சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பான விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, முத்தலாக் தடைச் சட்டம் என்பது, இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல், இறைவனுக்கு எதிரானது.
இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறிய அவர் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். முத்தாலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக அதிமுக வெளிநடப்பு செய்தாலும், அன்வர் ராஜா பேசியது பாஜகவுக்கு கடுப்பை உண்டாக்கியது.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுக- பாஜக மேலிடம் பேசி வரும் நிலையில், அன்வரின் பேச்சு இதற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையில் ஆழ்ந்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் வேணு கோபாலை அழைத்து, முத்தலாக் குறித்த அன்வர் ராஜாவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்ற பேட்டி அளிக்க சொல்லியுள்ளார்.
இதை அறிந்த அன்வர் ராஜா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.