
இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் என துத்துக்குடியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஆறுதல் சொன்னார்கள். தன் பங்கிற்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸாரின் செயல்பாட்டை ரஜினி கண்டித்திருந்தார். “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, அரசின் அலட்சியம், உளவுத் துறை உட்பட ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல் துறையின் வரம்பு மீறிய, சட்டத்துக்குப் புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்ததை வரவேற்ற ரஜினி, “இந்த வெற்றி போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்குச் சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் ரஜினிகாந்த் மக்களின் எந்தப் பிரச்சினையிலும் பங்கெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ரஜினி இன்று சந்திக்கவுள்ளார். காலை 8 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவுள்ளார். இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கினார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது. தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகள் தான். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார்.
தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். சினிமா நடிகனான தன்னை பார்த்தால் தற்போது துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன். உளவுத்துறை தோல்வியால் தூத்துக்குடியில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரில் சிலர் பிரமை பிடித்து போயுள்ளனர் . இந்த பிரச்சனையில் தமிழக அரசை ராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. கலவரத்தில் ஏகப்பட்ட பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்டது.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இப்படிதான் நடந்தது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை. ஆலையை திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற எண்ணமே இனி எந்த அரசுக்கும் வரக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.