கனிமொழிக்கு வேறு அசைன்மென்ட்..! கொங்கு மண்டலத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Jul 1, 2021, 10:27 AM IST
Highlights

கொங்கு மண்டலத்திற்கு சென்று கட்சி கட்டமைப்பை ஆராய்ந்து, நிர்வாகிகளின் திறனை அறிந்து புதிய நிர்வாகிகளை பரிந்துரைக்க வேண்டும் என்பது தான் கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுக்க இருந்த அசைன்மென்ட். ஆனால் இதில் உதயநிதிக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். 

திமுக படு வீக்காக இருக்கும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவிக்கு கனிமொழி பெயரைத்தான் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வந்தார், ஆனால் அங்கு தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கச்சிதமாக காய் நகர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார் உதயநிதி.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது கொங்கு மண்டலம் தான். சென்னைக்கு அடுத்து பெரிய மாவட்டமாக கருதப்படும் கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வேட்பாளர்களால் வெல்ல முடியவில்லை. ஈரோடு, நாமக்கல்லிலும் வெற்றிக்காக திமுக கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவை திமுக வென்று இருந்தாலும் கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுகவிற்கு தோல்வி தான். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த போது கொங்கு மண்டலத்தில் தோற்றதையே தனது பிரஸ்டீஜ் பிராப்ளமாக ஸ்டாலின் பார்த்து வருகிறார். தற்போது ஆளும் கட்சியாக இருந்து கொண்டு கோவையை கோட்டையிட்டால் சரியாக இருக்காது என்பது ஸ்டாலின் முடிவு. எனவே கொங்கு மண்டலத்தில் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டதாக சொல்கிறார்கள். இந்த பணிகளை மேற்கொள்ள நம்பகமான ஒருவர் தேவை என்று அவர் யோசித்த நிலையில் கனிமொழிக்கு அந்த பணிகளை கொடுக்கலாம் என்கிற எண்ணத்திற்கும் ஸ்டாலின் வருகை தந்தார்.

கொங்கு மண்டலத்திற்கு சென்று கட்சி கட்டமைப்பை ஆராய்ந்து, நிர்வாகிகளின் திறனை அறிந்து புதிய நிர்வாகிகளை பரிந்துரைக்க வேண்டும் என்பது தான் கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுக்க இருந்த அசைன்மென்ட். ஆனால் இதில் உதயநிதிக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். இதனால் தான் இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில் கோவைக்கு சென்று கட்சிப்பணிகளில் உதயநிதி விறுவிறுப்பு காட்டினார். மேலும் கொங்கு மண்டலத்தில் திமுகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்ற சில வியூகங்களையும் அவர் வகுத்து வைத்துள்ளார்.

இதற்காக தனக்கு கொங்கு மண்டலம் சார்ந்த சில பதவிகளையும் உதயநிதி கோரியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த பதவிகளுக்கு கனிமொழியை ஸ்டாலின் பரிசீலித்து வந்ததால் உதயநிதிக்கு அந்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகி வந்தது. ஆனால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் கனிமொழிக்கு கட்சியின் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் இதற்கு பதிலாக கொடுக்கப்படும் என்கிறார்கள்.

click me!