தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கூட்டணி தேவையில்லை
தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி உடையும் நிலையும் உருவாகியுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறும்போது பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தனித்து முடிவெடுக்க முடியாது என கூறினர்.
கடன்காரனாக உள்ளேன்
இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வித மாற்றுக்கருத்தும் அதில் இல்லை. என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துகள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது நல்லது தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன்.
நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்
தமிழ்நாட்டில் இன்றைக்கும் பணம் செலவு செய்யாமல் தேர்தலை சந்திப்போருக்கான வாக்குவங்கி, மாற்றத்தை முன்னிருத்துவோருக்கான வாக்குவங்கி இருக்கிறது. இரண்டாண்டு அரசியல் அனுபத்தில் இதை நான் நம்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலை சந்திப்பது குறித்த என் நிலைப்பாட்டை கூறுகிறேன் அவ்வளவு தான். அதில் 50% நபர்களுக்கு உடன்பாடும் , 50% எதிர் கருத்தும் உள்ளது. ஆனால் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இலங்கையின் பிரபல தாதா அங்கோட லொக்கா கோவையில் இறந்தது எப்படி.? சிபிசிஐடி போலீசார் பரபரப்பு தகவல்