காமெடி நடிகர் என்றாலே அது அண்ணாமலைதான்.. திரும்பவும் நிரூபிச்சிட்டாரு.. போட்டுத்தாக்கும் சுப.வீரபாண்டியன்!

By Asianet TamilFirst Published May 28, 2022, 9:13 AM IST
Highlights

வைக்க வேண்டிய கோரிக்கைகளை வைக்க  வேண்டிய  இடத்த்தில் வைத்து, வரலாற்றில் உயர்ந்திருக்கிறார் ஸ்டாலின். வந்த நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு டெல்லி திரும்பியிருக்கிறார் மோடி என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், “திரைப்படத்தில்தான் நகைச்சுவை நடிகர்கள் இருப்பார்கள். இப்போது அரசியலிலும் வந்துவிட்டார்கள் என்று நான் சொன்னவுடன், பாவம் அண்ணாமலையைத் தாக்காதீர்கள்' என்கிறார் பக்கத்தில் உள்ள ஒருவர்! நகைச்சுவை நடிகர் என்றாலே அது அண்ணாமலைதான் என்று ஆகிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன் பிரதமரும், முதலமைச்சரும் கலந்து கொண்ட கூட்டம் பற்றி அண்ணாமலை கூறியிருப்பது மீண்டும் அவர் நிலையை உறுதி செய்கிறது. முதலமைச்சர் பெயரைச் சொன்னதும் கைதட்டல் வானைப பிளக்கிறது, பிரதமர் பெயரைச் சொல்லும்போது அவ்வளவு கையொலி இல்லை, இதுவெல்லாம் திட்டமிட்ட சதி என்கிறார் அண்ணாமலை!


 
அன்று  நடந்தது சதியன்று. மாபெரும் தலைவனொருவனின் அரசியல் நாகரிக அரங்கேற்றம். பிரதமருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பில் சற்றும் குறையாமல், மிகுந்த பண்போடு அவரை வரவேற்று மேடைக்கு அழைத்துவந்து, மேடை ஏறும்போதும், அவருக்குப் பின்னால் அடக்கமாக நடந்து வந்து, நம் முதலமைச்சர்தான்  மிக நாகரிகமானவன்  என்பதை மெய்ப்பித்தார்! ஆனால், பேசும்போது, இவ்வளவு கோரிக்கைகளை வைத்ததும், திராவிட மாடல் என்று கூறியதும்தான் பாஜகவினரைக்  கோபம் கொள்ள வைத்துள்ளது. ஒரு பிரதமர் ஒரு மாநிலத்தின் விழாவிற்கு வரும்போது, அவர் முன்னிலையில், தங்களின் தேவைகளை எடுத்துக் கூறுவதுதான் நல்ல முதலமைச்சருக்கு அழகு! அதனைத்தான் தமிழ்நாடு முதல்வரும் செய்துள்ளார்.
 
இதற்கு முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பல நடந்துள்ளன. காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று எல்லா முதல்வர்களும் பிரதமர் முன் கோரிக்கைகளை  வைத்துள்ளனர். ஏன், ஜெயலலிதாகூட அப்படி ஒருமுறை வேண்டுகோள் வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வெளிநடப்பே செய்துள்ளார். 1955 ஆம் ஆண்டு சென்னை வந்த பிரதமர் நேரு கலந்துகொண்ட மேடையில் காமராஜர் வைத்த கோரிக்கைதான் நெய்வேலி நிலக்கரியைத்  தோண்டியெடுக்கும் திட்டம்.  முதலமைச்சர்கள் வைக்கும் கோரிக்கைகளில் நியாயமானவற்றை அங்கேயே ஏற்று பிரதமர் அறிவிப்புப் செய்தால், அது இருவருக்கும் பெருமை தரும்! 

அவ்வாறு அன்று பிரதமர் மோடி சில கோரிக்கைகளை, குறிப்பாக நீட் தேர்வு விலக்கு போன்றவற்றை ஏற்று மேடையிலேயே அறிவித்திருந்தால், முதலமைச்சருக்குக்  கிடைத்ததைவிடக்  கூடுதல் கையொலிகளை அவர் பெற்றிருக்கலாம்.  அண்ணாமலையும் அகமகிழ்ந்திருப்பார்! வைக்க வேண்டிய கோரிக்கைகளை வைக்க  வேண்டிய  இடத்த்தில் வைத்து, வரலாற்றில் உயர்ந்திருக்கிறார் ஸ்டாலின். வந்த நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு டெல்லி திரும்பியிருக்கிறார் மோடி!” என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

click me!