காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பாஜக நிர்வாகி கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தனது காரில் பூந்தமல்லி நசரத்பேட்டை சிக்னல் அருகே பி.பி.ஜி.சங்கர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென வழிமறித்த மர்ம கும்பல் கன் இமைக்கும் நேரத்திற்குள் காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பி.பி.ஜி.சங்கர் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடியுள்ளார். அவரை விரட்டிய கும்பல் நடு ரோட்டில் படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தினந்தோறும் கொலை
கொலை சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
நாடகம் போடும் முதல்வர்
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்