ஆண்டிபட்டி பணம் எங்களோடது அல்ல….அதிமுகவோட பணம் !! அந்தர் பல்டி அடித்த அமமுக…

By Selvanayagam PFirst Published Apr 17, 2019, 9:19 AM IST
Highlights

ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 48 லட்சம் ரூபாய் தங்களுடையது அல்ல என்றும் அது அதிமுகவின்  பணம் என்றும் அத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜெயகுமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில்  வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 48 லட்சம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர்   பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய அமமுக அலுவலகத்துக்குச் சென்ற பறக்கும் படையினரை உள்ளே நுழைய விடாமல் அமமுக தொண்டர்கள் தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

பறக்கும் படை ஆய்வு செய்தபோது அதைத் தடுத்தாகவும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முயன்றதாகவும் 150 அமமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிபட்டி பேருராட்சி செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆண்டிபட்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் அமமுகவுடையது அல்ல என திட்டவட்டமாக கூறினார்.

மேலும் ரெய்டு நடந்ததாக கூறப்படும் ஆண்டிபட்டி வணிக வளாகம், அதிமுகவினருக்கு சொந்தமானது என்றும், அவர்கள்தான் பண பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக ஜெயகுமார் தெரிவித்தார். இதையடுத்து வருமான வரித்துறையினர் பணம் தொடர்பாக வுசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!