
பக்கம் பக்கமாக எழுதி விளக்க வைக்க வேண்டிய விஷயங்களை சில நேரங்களில் ஜஸ்ட் ஒரே வார்த்தையில் வெளிப்படுத்திவிட்டு போயினே இருக்கலாம். அரசியலும் அப்படித்தான்! ஒரு ப்ராஜெக்டில் வெற்றி பெறுவதற்காக பெரிய ஸ்கெட்ச்செல்லாம் போட்டு, ஒர்க் அவுட் பண்ணி, அதை செயல்படுத்தி….ன்னு சவ்வுமிட்டாய் கணக்காக இழுத்துக் கொண்டிருப்பார்கள் சில தலைவர்கள். ஆனால் சிலரோ சிம்பிளாக ரைட்டில் கையை காட்டி, லெஃப்டில் இண்டிகேட்டரை போட்டுவிட்டு ச்சும்மா ஸ்டிரெய்ட்டாக வண்டியை விட்டுக்கினே இருப்பார்கள்.
அப்படித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் லேட்டஸ்ட் சக்ஸஸ் ஒன்றைப் பார்த்து அப்டியே ஷாக்காகி நிற்கிறார்கள் மருத்துவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி. இன்னா மேட்டரு?... அதாவது 2021 சட்டசபை தேர்தலில் அமோகமான மக்கள் செல்வாக்குடன் கோட்டையில் கொடியை நாட்டியது தி.மு.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை தாண்டி அருதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தன் கூட்டணி சகாக்களிடம் குழைய வேண்டிய நிர்பந்தமே இல்லை ஸ்டாலினுக்கு. ஆனாலும் கூட்டணியை சேர்ந்த தமிழக காங்கிரஸ், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்கள் மற்றும் வி.சி.க. கட்சிகளுக்கு மென்மையான முகத்தை காட்டியே வந்தது தி.மு.க. ஆனால் எதிர்பாராத விதமாக ஆளுங்கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையில் உரசல் துவங்கியது. அல்லுசில்லு விவகாரத்தில் துவங்கிய மோதல், அரசியல் பிளவு வரையில் வேர்விட துவங்கியதுதான் அதிர்ச்சியே. ஆங்காங்கே தி.மு.க.வின் அரசை வி.சி.க.வினர் சாடிப் பேசுவதும், வாய்ப்பு கிடைக்கும் போது சிறுத்தைகள் மீது போலீஸ் வழக்கு போடுவதுமென துவங்கிய யுத்தம் தாறுமாறு அனலுடன் போய்க் கொண்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு இது சென்ற போது அதிருப்தியானார். கருணாநிதியின் காலத்தில் அவரை எந்த கண்டிஷனுமில்லாமல் நேசித்த வி.சி.க.வின் முக்கிய புள்ளிகள் ஸ்டாலினிடம் விறைப்பு காட்டியதெல்லாம் அவர் மனதில் வந்து சென்றிருக்கிறது. இந்த நிலையில்தான், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதில் விடுதலை சிறுத்தைகளுக்கு கிட்டத்தட்ட தி.மு.க. அல்வா கொடுக்கும் முடிவில் உள்ளது! என்பதே பிரதான பேச்சாக இருந்தது. இது திருமாவை துணுக்குற செய்தது. அவர் சீட் எண்ணிக்கையை மனதில் வைத்து கூட்டணியை தாஜா செய்பவர் இல்லைதான்! ஆனாலும் தன் இயக்கத்தின் ஸ்திரத்தன்மையை காக்க, கூட்டணி தலைமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும் குணமும் வேண்டும் என்பதை அறிந்தவர். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தங்களையும், ம.தி.மு.க.வையும் கூட்டணிக்குள்ளேயே சேர்க்கும் முடிவில் தி.மு.க. இல்லாததையும், துரைமுருகன் இதை வெளிப்படையாக சொல்லிக்காட்டி பேசியதையும் நினைவு கூர்ந்தார்.
இது போதாதென்று சமீபத்தில் அ.தி.மு.க. உடனான உறவை முறித்துக் கொண்ட பா.ம.க.வும், தி.மு.க. கூட்டணியை நோக்கி முன்னேறி வருவதையும் கவனித்தார். பா.ம.க. இருக்கும் கூட்டணியில் சிறுத்தைகள் இருக்க முடியாது! அதேவேளையில் சிறுத்தைகள் இருக்கும் கூட்டணிக்குள் பா.ம.க.வை வரவிடவே கூடாது! என்பது அவரது நிலைப்பாடு.
அதனால் பக்கா ஸ்கெட்ச் போட்டவர், வருடாவருடம் டிசம்பரில் தன் கட்சி சார்பாக வழங்கப்படும் விருதுகள் விழாவை இந்த முறை இந்த சூழலுக்கான தீர்வாக பயன்படுத்தினார். அதன்படி தமிழக முதல்வரும், தி.மு.க. கூட்டணி தலைவருமான ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ எனும் விருதினை அறிவித்தார். இந்நிகழ்வு சமீபத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட முதல்வரும் திருமாவிடம் நெருடலில்லாத நேசம் காட்டினார். அவ்விழாவில் விருது பெற்ற இன்னொரு தலைவரான வைகோவின் பேச்சானது ஸ்டாலினை மிக உயர்த்திப் பிடித்ததோடு, தி.மு.க. வெற்றிக் கூட்டணியில் ம.தி.மு.க. மற்றும் வி.சி.க.வுக்கான இருப்பை பெவிகால் போட்டு ஒட்டி உறுதி செய்து கொண்டது. திருமா செம்ம ஹாப்பி!
இதில் டாக்டர்கள்தான் டரியலாகிவிட்டனர். தி.மு.க. கூட்டணியை நோக்கிய தங்களின் பட்டம் பக்காவாக டேக் ஆஃப் ஆனாலும் கூட திடுதிப்புன்னு இப்படி திருமாவால் அறுக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கியதை நினைத்து அப்செட்டாகியுள்ளனர்.
விடுங்க ப்ரோ இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?