ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?... டாஸ்மாக் விற்பனையால் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 15, 2021, 2:34 PM IST
Highlights

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்ததை அடுத்து சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் இல்லாத சென்னை உட்பட, 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. 

அதன்படி, வைரஸ் பரவல் அதிகமுள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1,650 மது கடைகள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருக்கும் 3,600க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை, 10 மணிக்கு திறக்கப்பட்டன. 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள்  உற்சாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுபானங்களை வாங்கிச் சென்றனர். 

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதாகவும், போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதாலேயே டாஸ்மாக் திறக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார். இருப்பினும் திமுக மீதான விமர்சனங்கள் குறைந்தபாடியில்லை. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு. கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. 

ஆனால்,  தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து  மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?. மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!