"திவாலாகி விட்டதா தமிழ்நாடு அரசு?" - சந்தேகம் கிளப்புகிறார் அன்புமணி ராமதாஸ்

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 07:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
"திவாலாகி விட்டதா தமிழ்நாடு அரசு?" - சந்தேகம் கிளப்புகிறார் அன்புமணி ராமதாஸ்

சுருக்கம்

தமிழக அரசின் நிதிச்செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதின்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை; தமிழகத்தின் நிதிநிலைமை உயிரோட்டத்துடன் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக நாடித்துடிப்பை சோதித்து பார்க்கும் நோக்கம் கொண்டவை. ஆனால், இந்த வினாக்களுக்கு தமிழக அரசிடம் பதில் இல்லை என்பது தான் சோகம்.

நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக இரு வழக்கறிஞர்கள் தொடர்ந்த 2 வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த ஒரு வழக்கு என மொத்தம் மூன்று வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் சிவஞானம், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது  ‘‘ஜனநாயகத்தின் 3 தூண்களில் ஒன்றான நீதித்துறையை நடத்துவதற்கும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்படாததற்கு வேதனையையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  நீதித்துறை அகாடமியின் செயல்பாட்டுக்கான நிதி கூட ஒதுக்கப்படாததும், அதன்காரணமாக இரு பயிற்சித் திட்டங்கள் ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டிருப்பதும் நிலைமை மோசமாகியிருப்பதை காட்டுகின்றன. 

மத்தியத் திட்டங்களை பெறுவதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக நீதித்துறைக்கு கிடைக்க வேண்டிய ரூ.150 கோடி மத்திய அரசின் நிதி காலாவதியாகிவிட்டது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜனநாயகத்தின் அங்கமான நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், மத்திய அரசின் நிதியை பெற்றுத் தருவதிலுமே தமிழக அரசு இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டால், சாதாரண மக்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு அலட்சியம் காட்டும்? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

தமிழக அரசு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறதா? தமிழகம் திவாலான மாநிலம் என்று அறிவிக்கப்போகிறதா? என்பதை அறிய விரும்புகிறோம். அத்தகைய நிலை ஏற்பட்டால்  தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 360 ஆவது பிரிவை குடியரசுத் தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். 

நீதிபதிகளின் கருத்தில், நீதித்துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க மறுப்பதால் ஏற்பட்ட கவலையும், வேதனையும், கோபமும் வெளிப்படையாக  தெரிகிறது. ஆனால், நீதிபதிகளின் கருத்துக்கள் எந்த வகையிலும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 30.12.2014 அன்று தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ தமிழகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தமிழகத்தின் வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், கூடுதல் நிதிச்சுமையை தமிழக அரசால் ஏற்றுகொள்ள முடியாது’’ என்று கூறியிருந்தார். 

அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக மாநில முதலமைச்சரே கூறிய நிலையில், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை வலியுறுத்தினார். ஆனால்,  அதற்கெல்லாம் தமிழக அரசிடமிருந்து இன்று வரை வெளிப்படையாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஒருவேளை தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தால், அதை சமாளிப்பதற்கான நிதி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை அதிமுக அரசு ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களுக்கு குஷி.. ரூ.3000 பொங்கல் போனஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!