மும்பையில் குவியும் இந்தியா கூட்டணி தலைவர்கள்..! கூட்டத்தின் இன்றைய, நாளைய முக்கிய நிகழ்வுகள் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Aug 31, 2023, 10:41 AM IST

பாஜகவை வீழ்த்தும் வகையில் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள  இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில்  சின்னம் அறிமுகம், ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
 


நாடாளுமன்ற தேர்தல்- அரசியல் கட்சிகள் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை 3 வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே பீகார் மற்றும் பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் இன்றும் நாளையும் மும்பையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை நடைபெறவுள்ளது.  

Latest Videos

மும்பையில் குவியும் எதிர்கட்சி தலைவர்கள்

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெறும் இந்தியா கூட்டணியின்  கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் கூட்டணிக்கான சின்னம் தேர்வு மற்றும் அனைத்து உறுப்பு கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.  இந்த கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட பல முதல்வர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஏற்கனவே மும்பை வந்துள்ளனர். மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், நிதிஷ் குமார்,  மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று மும்பைக்கு வரவுள்ளனர். , அதன்பிறகு உறுப்பினர்கள் அனைவரும் உத்தவ் தாக்கரே வழங்கும் இன்று இரவு விருந்தில் கலந்துகொள்வார்கள்.

நிகழ்ச்சி நிரல் என்ன.?

இன்றைய நிகழ்ச்சியை பொறுத்தவரை மாலை 4 மணிக்கு  செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. தொடர்ந்து 6.30 மணிக்கு ஆலோஞனை கூட்டம், இரவு 8 மணிக்கு இரவு விருந்து நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாளை காலை இந்தியா கூட்டணியின் லோகோ  10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளனர். இறுதியாக நாளை மாலை 3.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. 

click me!