தினகரனைப் பார்த்து பயந்து பதறுகிறார் ஸ்டாலின்: அ.க.கூவுக்கு அழைக்காததால் பாய்ந்து பிறாண்டும் அ.ம.மு.க.

 
Published : Apr 02, 2018, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
தினகரனைப் பார்த்து பயந்து பதறுகிறார் ஸ்டாலின்: அ.க.கூவுக்கு அழைக்காததால் பாய்ந்து பிறாண்டும் அ.ம.மு.க.

சுருக்கம்

AMMK party angry statements against MK Stalin

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் நேற்று அறிவாலயத்தில் நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தினகரனை தி.மு.க. அழைக்காததற்கு ஸ்டாலினின் பயமே காரணம்! என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொளுத்திப் போட்டிருப்பதுதான் ஹைலைட்டே.

இது தொடர்பாக அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் வைக்கும் விமர்சனம் இப்படியாக விரிகிறது...”சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தன் கைப்பிள்ளைகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் போட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் எங்கள் தலைவர் தினகரனை அழைக்கவில்லை. 

தினகரன் என்ன சாதாரணமான நபரா? இந்த மாநிலத்தின் தலைநகரில் நடந்த இடைத்தேர்தலில் அரச துரோகத்தின் விளைவால் சுயேட்சையாக களமிறங்கினார். மத்திய அரசும், தமிழக அரசும் கைகோர்த்து அவரது பிரச்சாரத்தை தடுத்தது. அதையும் மீறி நின்றார், மக்கள் மனங்களை வென்றார். 

இந்திய அரசியல் வரலாறிலேயே சரித்திர சாதனையாக ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியை, அதுவும் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சி எனும் பெயரெடுத்த அ.தி.மு.க.வை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த நாட்டின் மிக முக்கிய அரசியல் இயக்கமான தி.மு.க.வை டிப்பாசிட் இழக்க வைத்தார். அப்பேர்ப்பட்ட அரசியல் தலைவரை அழைக்காதது ஏன்? ஒரே காரணம் அவர் மீது ஸ்டாலினுக்கு இருக்கும் பயம்தான். 

தலைவர் தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்து எடுக்கிறது. சமீபத்தில் தஞ்சையில் தலைவர் சிங்கிள் சிங்கமாக நடத்திய உண்ணாவிரத பெருவெற்றியை ஸ்டாலின் பார்த்து மிரண்டார். எங்கே அறிவாலயத்துக்கு அவர் வந்தால் தன்னைத்தாண்டி அவருக்கு மீடியா வெளிச்சம் கிடைத்துவிடுமோ! என்கிற பயத்தால்தான் தினகரனை ஸ்டாலின் அழைக்கவில்லை. 

நாங்கள் பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் மக்கள் நீதி மய்யத்தையும் அழைக்கவில்லையே! என்று தி.மு.க. சாக்கு சொல்லலாம். ராமதாஸ் கட்சியும், விஜயகாந்த் கட்சியும் தேர்தல் அரசியலில் செல்லா காசு ஆனவர்கள். அவர்களை அழைத்தும் பயனில்லை. ஆனால் தினகரன் தான் தமிழகத்தின் அ.தி.மு.க. முகம், அவர்தான் அடுத்த முதல்வர் என்று மக்களே முடிவு கட்டிவிட்டார்கள். அப்பேர்ப்பட்டவரை ஸ்டாலின் பயத்தின் அடிப்படையில் அழைக்காமல் விட்டிருக்கிறார். 

மத்திய அரசினை எதிர்த்து போராட்டம் செய்யும் ஸ்டாலின், அதே மத்திய அரசின் தத்துப்பிள்ளைகளாக இருக்கும் பழனிசாமி மற்றும் பன்னீர் அழைத்தால் தலைமை செயலகம் சென்று அவர்களை சந்திக்கிறார். அவர்களோ உப்பு போல் இவரை பயன்படுத்திவிட்டு மிக கடுமையான விமர்சனத்தை செய்கின்றனர். ஆனால் 2ஜி வழக்கில் ராசாவும், ஸ்டாலினின் தங்கையான கனிமொழியும் விடுவிக்கப்பட்டதற்கு வாழ்த்து சொன்ன நாகரிக அரசியல்வாதியான தினகரனை ஸ்டாலின் அழைக்கவில்லை. 

ஏற்கனவே அரசியலில் விஸ்வரூபமாய் நிற்பவரை நாம் மேலும் வளர்த்துவிட்டுவிடுவோமோ! என்று பயந்திருக்கிறார் பாவம் ஸ்டாலின். ஆனால் எத்தனை பேர் என்ன சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனம் வென்ற அண்ணன் தினகரனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளனர். 

ஒரு மீட்டிங்குக்கு அழைக்காததுக்கு இப்படியொரு பாய்ச்சலாய்யா?

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!