அமமுகவை பதிவு செய்யக்கூடாது... டி.டி.வி.தினகரனுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த புகழேந்தி..!

By vinoth kumarFirst Published Nov 29, 2019, 5:09 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பதிவு செய்ய தற்போது தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால் அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வரும் திங்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்திக்கும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். அவ்வப்போது டி.டி.வி.தினகரன் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும், அமமுக தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடருவோம். கட்சியை நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எங்களைக் கேட்காமல் அமமுகவை அங்கீகரிக்க கூடாது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டிடிவி.தினகரன் அந்த கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டனர். இந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

மேலும், தேர்தல் ஆணையத்தின் விதிபடி ஒருகட்சியை பதிவு செய்ய அந்த கட்சியை சேர்ந்த 100 தனிநபர்கள் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் புகழேந்தி உள்ளிட்ட 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன. பின்னர், தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக புகழேந்தி முன்னாள் அமைச்சர் உட்பட பலரும் அமமுக கட்சியில் இருந்து விலகி உள்ளனர். 

எனவே கட்சியை பதிவு செய்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பதே அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமலும் டிடிவி.தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிவிட்டதாகவும் தன்னை பொதுச்செயலாளர் என பிரகடணம் செய்து கொண்டதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை தான் கொடுத்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பதிவு செய்ய தற்போது தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால் அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வரும் திங்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!