சிவசேனாவின் கோரிக்கையை எங்களால் ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா மவுனம் கலைத்துள்ளார்
மகாராஷ்டிராவில் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை தனித்தனியே அழைத்து ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்கக் கோரினார். ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
இதனால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைக்க, அதை ஏற்றுக்கொண்டு நேற்றுமுதல் குடியரசுத்தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தில் தொடக்கம் முதல் சிவசேனா, பாஜக இடையிலான பிரச்சினையில் அமித் ஷா தலையிடாமலும், கருத்துத் தெரிவிக்காமலும் இருந்தார். இதனால், சிவேசேனா கட்சியும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த 20 நாட்களாக அமைதி காத்த பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா இன்று மவுனம் கலைத்து டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலுக்கு முன் நானும், பிரதமர் மோடியும் நமது கூட்டணி வென்றால், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்று பலமுறை தெரிவித்திருந்தோம். அப்போது ஒருவர்கூட எதிர்்ப்புத்தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது புதிய கோரி்க்கைகளுடன் எங்களிடம் பேசுகிறார்கள், இதே ஏற்க முடியாது.
ஆளுநர் கோஷியாரி போதுமான அவகாசம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். இதற்குமுன் எந்த மாநலத்திலும் மகாராஷ்டிராவில் கொடுக்கப்பட்ட அளவுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. இங்கு 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்தபின்புதான் ஆட்சி அமைக்க ஒவ்வொரு கட்சியாக அழைத்தார்.
சிவசேனா, காங்கிரஸ்-என்சிபி, எங்களால் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. இன்றுகூட எந்த கட்சியிடமும் பெரும்பான்மைக்கு தேவையான அளவு உறுப்பினர்கள் இருந்தால் ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்கக் கோரலாம்.
நான் சொல்லவிரும்புவதெல்லாம், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்திவிட்டார்கள் என்று கூறி கொந்தளிப்பதெல்லாம் அர்த்தமற்றது, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக மட்டுமதவிர வேறு ஏதும் இல்லை
என்சிபி கட்சி ஆட்சி அமைக்க போதுமான அவகாசத்தை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் தங்களால் ஆளுநருக்கு அளித்த இரவு 8.30 மணி காலக்ெகடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாது என்று கடிதம் எழுதியது. அதன்பின் இரவு 8.30 மணிவரை குடியரசுத்தலைவர் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதால், மாலையே குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.