வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடல் உறுப்பு கொடுக்க ரூ.12 கோடி லஞ்சம்! அன்புமணி பகீர் தகவல்...

By sathish kFirst Published Sep 4, 2018, 11:05 AM IST
Highlights


வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க, ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அதற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை,'' என  அன்புமணி  அதிர வைத்துள்ளார்.

வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க, ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அதற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை,'' என  அன்புமணி  அதிர வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்; கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் மே 18-ல் சாலை விபத்தில் காயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்தார். உறவினர்களிடம் கட்டாயமாக ஒப்புதல் பெறப்பட்டு அவரது உறுப்புகள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதுபற்றி மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.உக்ரைன் நோயாளிக்காக பெறப்பட்ட இதயம் சட்டவிரோதமாக லெபனான் நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அந்த இரு நோயாளிகளும் இறந்து விட்டனர்.அதேபோல், உள்ளூர் நோயாளிக்கு பெறப்பட்ட சிறுநீரகமும் இன்னொருவருக்கு வழங்கப்பட்டது உறுதியாகியுள்ளது.இதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஊரில் இல்லாததால் வெளிநாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

ஆனால், குறிப்பிட்ட நாளில் தலைமை மருத்துவர் ஊரில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில் தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட உறுப்பை வழங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.ஆட்சியாளர்கள், உயரதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும், அவர்கள் பதவி விலகி விட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சென்னையில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இதுபற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை.உறுப்பு தான ஊழல் குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால் தான் வெளிக்கொண்டு வர முடியும்.இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.இதுகுறித்து கவர்னரிடமும், சி.பி.ஐ. இயக்குனரிடமும் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

click me!