
மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிக்குள் அமைப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் தொலைவிற்கும் குறைவாக உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 31 ஆம் தேதி உத்தரவிட்டது. கடைகளை மூட கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 1500க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.
மதுக்கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் இருந்த அனைத்து மதுக்கடைகளும் இரவோடு இரவாக மூடப்பட்டன. இந்தக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடைகள் முன்பு அமர்ந்தும், உணவு சமைத்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.