
அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக அனைத்து அமைச்சர்களும் நாளை காலை சென்னைக்கு வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக் குழுவை கூட்டி பொதுச் செயலாளர் சசிகலா கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என இரு அணிகள் இணைப்பின் போது வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் தரப்பினர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்தார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார் என தெரிவித்தார்.
இன்று அரியலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசிக்க அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னைக்கு வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.