
சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெற்ற அமைதிப் பேரணியில் 25 ஆயிரம் பேர் கூட கூடாத காரணத்தினால் மு.க.அழகிரி மிக கடுமையாக அப்ஷெட்டாகியுள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி வந்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டார் அழகிரி. அவருக்கு துணையாக அவரது மகன் துரை தயாநிதியும் மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் என்கிற வீதம் நியமித்து ஆட்களை சென்னைக்கு அழைத்து வர பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தார். போதுமான அளவிற்கு பணமும் செலவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் வருவதாக கூறிய பலரும் ஜகா வாங்கிவிட்டனர்.
மதுரையில் மட்டுமே கூறியபடி அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். மற்ற அனைத்து ஊர்களிலும் இருந்தும் கடமைக்கு என்று புறப்பட்டவர்கள் காலை பத்து மணி அளவில் தான் பெருங்களத்தூரே வந்து சேர்ந்தனர். போதுமான எழுச்சியும் இல்லாமல், கூட்டமும் இல்லாமல் இருந்த காரணத்தினால் பத்து மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த அழகிரியின் பேரணி காலை 11.30 மணிக்கு தான் தொடங்கியது. ஒரு லட்சம் பேரில் பாதி பேராவது வந்துவிடுவார்கள் என்று நம்பிய அழகிரி திருவல்லிக்கேணி வந்த போது தான் 25 ஆயிரம் பேர் கூட வராதது தெரிந்தது. மேலும் நேற்று கூடிய கூட்டத்தை ஒரு மாவட்டச் செயலாளரே கூட்டிவிட முடியும் என்கிற போது கலைஞர் மகனான தன்னால் நினைத்ததை சாதிக்க முடியவில்லையே என்கிற கோபம் அழகிரிக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பேரணி துவங்கிய இடத்தில் முண்டி அடித்த நான்கு பேருக்கு அழகிரி செம அடி கொடுத்தார். ஆனால் வாலாஜா சாலையில் செல்லும் போது ஓரளவிற்கு கூட்டம் தென்பட்டதால் லோடு ஆட்டோ ஒன்றில் ஏறி பேரணியை தொடங்கினார் அழகிரி. இறுதிவரை எதிர்பார்த்த கூட்டம் வராத நிலையில் கலைஞர் நினைவிடத்தை அடைந்த போது பேரணியில் இருந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாகவே 10 ஆயிரம் பேர் தான். இதனால் தான் கலைஞர் நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தனது பேரணிக்கு எந்த நோக்கமும் கிடையாது என்று குண்டை தூக்கி போட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றார். தனது ஆதங்கத்தை செப்டம்பர் 5ந் தேதி தெரிவிக்க உள்ளதாக அழகிரி கூறியிருந்தார். ஆனால் பிசுபிசுத்துப் போன பேரணியை தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினால் எடுபடாது என்பதால் தான் எதுவும் பேசாமல் அவர் சென்றுள்ளார்.
இது குறித்து அழகிரிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது, காசு வாங்கிக் கொண்டு கடைசி நேரத்தில் பலரும் கம்பியை நீட்டிவிட்டனர். சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஆண் பெண்களை பேரணிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தோம். பணப்பட்டுவாடாவும் கனக்கச்சிதமாக முடிந்தது. ஆனால் அவர்களில் பாதி பேர் கூட பேரணிக்கு வரவில்லை. வந்தவர்களும் அழகிரி வர தாமதம் ஆனதால் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதே போல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களும் சென்னையை சுற்றிப்பார்க்க புறப்பட்டுவிட்டனர்.
மெரினா கடற்கரையில் வாகனங்களை நிறுத்திய பலரும் காலையிலேயே குடித்துவிட்டு அங்கேயே மட்டையாகிவிட்டனர். மேலும் பலர், வெயில் அதிகமாக இருந்த காரணத்தினால் அப்படியே சாலை ஓரமாக ஒதுங்கிக் கொண்டனர். இதனால் தான் கூட்டம் கூடவில்லை என்று அண்ணன் டென்சன் ஆனதாகவும், எதுவும் பேசாமல் சென்றுவிட்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பேரணி பிசுபிசுத்துவிட்டதால் ஸ்டாலினுக்கு எதிராக அடுத்து என்ன செய்வது என்று அழகிரி யோசிக்க ஆரம்பித்துள்ளாராம். ஆனால் ஸ்டாலின் ஆதரவாளர்களோ இனி அழகிரியின் அரசியல் எதிர்காலம் அவ்வளவு தான் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.