ஏர் இந்தியாவுக்கு ரூ.4,685 கோடி நஷ்டம்.... யாரும் வாங்கவில்லை என்றால் மூடுவது உறுதி.... மத்தியஅரசு அதிரடி தகவல் !!

By Selvanayagam PFirst Published Nov 29, 2019, 11:19 AM IST
Highlights

விமான பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அன்னிய செலாவணி விகித வேறுபாடு போன்றவற்றால் கடந்த (2018-19) ஆண்டில் ஏர் இந்தியாவுக்கு ரூ.4,685 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. 

ஏர் இந்தியாவை தனியாருக்கு தள்ளிவிட மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. அதேசமயம் தனியார் நிறுவனங்கள் எதுவும் ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை என்றால் அதனை மூடி விடும் முடிவில் மத்திய அரசு உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தொடர்பான கேள்விக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஏர் இந்தியாவுக்கு ரூ.4,685 கோடி செயல்பாட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமான பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அன்னிய செலாவணி விகித வேறுபாடு ஆகியவைதான் ஏர் இந்தியாவின் நஷ்டத்துக்கு காரணம்.

கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் விமான பெட்ரோலுக்காக மொத்தம் ரூ.10,034 கோடி செலவு செய்துள்ளது. 

அதற்கு முந்தைய ஆண்டில் ஏா் இந்தியாவின் விமான பெட்ரோல் செலவினம் ரூ.7,363 கோடியாக இருந்தது. இதுதவிர அன்னிய செலாவணி விகித வேறுபாடு காரணமாக செலவினம் ரூ.772 கோடி உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் (2017-18) அது ரூ.31 கோடியாக இருந்தது. ஏர் இந்தியாவின் பங்குகளை முழுவதுமாக விற்க முயன்று வருகறிறோம்.யாரும் வாங்காவிட்டால், ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும்  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!