எதிர்கட்சிகளை ஆசை காட்டி திடீரென ‘யூ’டர்ன் அடித்த அதிமுக..!! வாயிலும் வயிற்றிலும் அடித்து கதறும் கி. வீரமணி..!

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2020, 3:55 PM IST
Highlights

அவமானம் அவமானம் இலைமறை காயாக இருந்த இந்தக் குற்றச் சாட்டு - மேலும் விரிவாகி, பாஜகவிடம் அதிமுகவின் பச்சை ‘‘சரணாகதி படலம்‘’ என்பது திட்டவட்டமாகி விட்டது. அப்பட்டமான அவமானத்தையும், கேலியையும் தமிழக அரசு வலிந்து சம்பாதித்துக் கொண்டது அசல் வெட்கக்கேடே.

'கரோனா காரணம் என்னாயிற்று? கரோனா தொற்றின் அடுத்தகட்டப் பரவலின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி, காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு நேற்று (5.11.2020) அனுமதி மறுத்த தமிழக அதிமுக அரசு, இன்று (6.11.2020) திடீரென்று ‘யூ’டர்ன் (U-Turn) அடித்து, தனது நிலையைத் தலைகீழாக மாற்றிக் கொண்டது ஏன்? என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: தடையை மீறிய நிலையில், பூவிருந்தவல்லி அருகே பாஜக தலைவரைக் கைது செய்யத் தயாராக இருந்த அந்தத் தருணத்தில், காவல்துறை - திடீரென்று மேலிடத்து உத்தரவால் பின்வாங்கிவிட்டது. 

கரோனா அடுத்து பரவாது என்று ஒரே நாளில் திடீர் ‘ஞானோதயம்‘ ஏற்பட்டு, முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதா அரசு? தமிழகத்தை ஆள்வது அதிமுகவா - பாஜகவா? இதன் பின்னணி என்ன? மத்திய பாஜக அரசின் தலையீட்டால் - அழுத்தம்தான் அதிமுக அரசின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள எந்தவித சிரமமும் இல்லை. பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் மாநில அதிமுக அரசு நடந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே பொதுவாகப் பரவலாகவே இருந்து வருகிறது. 

அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் - தமிழ்நாட்டை ஆள்வது அதிமுக அரசா - பாஜக அரசா என்ற கேள்வி சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரவலாகப் போகிறது என்பதில் ஐயமில்லை. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அதிமுக அரசு விடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல. அவமானம் அவமானம்  இலைமறை காயாக இருந்த இந்தக் குற்றச் சாட்டு - மேலும் விரிவாகி, பாஜகவிடம் அதிமுகவின் பச்சை ‘‘சரணாகதி படலம்‘’ என்பது திட்டவட்டமாகி விட்டது. அப்பட்டமான அவமானத்தையும், கேலியையும் தமிழக அரசு வலிந்து சம்பாதித்துக் கொண்டது அசல் வெட்கக்கேடே. 

அனுமதி மறுப்பில் முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்ட இரண்டாம் நிலை கரோனா பாதிப்பு இந்த வேல் யாத்திரையின் காரணமாக ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு? பாஜகவா? அனுமதி கொடுத்த அதிமுக அரசா? ஓர் ஆட்சி நிர்வாகத்துக்குரிய அழகல்ல இது - இருக்க முடியாது. அண்ணாவின் பெயரால் நடைபெறும் ஓர் அரசு மாநில உரிமையை இந்த அளவுக்கு அடகு வைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த முடிவுக்கு அதிமுக அரசு கடும் விலையைக் கொடுக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை''.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!