பிரசாரத்தில் பாஜக வாசனையே வராமல் பார்த்துக்கொள்ளும் அதிமுக வேட்பாளர்... மோடி படத்தை ஒதுக்கி வியூகம்..!

By Asianet TamilFirst Published Mar 20, 2021, 10:05 PM IST
Highlights

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, சிறுபான்மையினர் வாக்குகளைக் கவருவதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களைக் குறிப்பிடாமல் பிரசாரம் செய்துவருகிறார்.
 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.வி.ராஜன் செல்லப்பா களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சிபிஎம் வேட்பாளர் பொன்னுதாயி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளைக் கடந்த எய்ம்ஸ் திட்டம் நிறைவேறாதது, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்ற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன.
இதனால், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாசனையே வராமல் பார்த்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.  பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்கள், பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கிறார். துண்டு பிரசுரங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படங்களை மட்டுமே அச்சிட்டு வழங்கிவருகிறார். 
அதிமுக  தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1500, 6 சிலிண்டர்கள் இலவசம், வாஷிங்மெசின் போன்ற அம்சங்களைக் குறிப்பிட்டு மட்டுமே துண்டு பிரசுரங்களை ராஜன் செல்லப்பா வழங்கிவருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் எதையும் குறிப்பிடுவதில்லை. சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ராஜன் செல்லப்பா இந்த வியூகத்தைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. இதை சிபிஎம் விவாதப் பொருளாக்கி கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதிமுகவினரின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு பாஜகவினர் ஆதங்கத்தில் உள்ளனர்.

click me!