அதிமுக கூட்டணி தான்..! இறங்கி வந்த பாமக..! தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!

By Selva KathirFirst Published Jan 9, 2021, 2:09 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அக்கட்சி இறங்கி வந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அக்கட்சி இறங்கி வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து சுமார் ஓராண்டு வரை அதிமுக – பாமக உறவு சீராக இருந்தது. ராமதாஸ் விடுக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் அவ்வப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியும் வந்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் ராமதாஸ் நெருக்கத்தை குறைக்க ஆரம்பித்தார். அவ்வப்போது தமிழக அரசை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. இதற்கு காரணம் நெருக்கம் தொகுதிப் பங்கீட்டில் நெருடலை ஏற்படுத்தும் என்று அவர் கருதியது தான்.

இவை எல்லாவற்றையும் விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸோ, அன்புமணியோ முதலமைச்சரை நேரில் சந்திக்கவில்லை. ஜி.கே.மணியை மட்டுமே அனுப்பி இரங்கல் தெரிவித்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்தது. இதற்கு வாழ்த்தோ, பாராட்டோ ராமதாஸ் தெரிவிக்கவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வாழ்த்து தெரிவித்தது.

இந்த நிலையில் தான் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு என்கிற முழக்கத்தை ராமதாஸ் கையில் எடுத்தார். இதற்கான போராட்டத்திற்காக சென்னைக்கு அணி அணியாக வன்னியர்கள் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆங்காங்கே பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக – பாமக இடையிலான உறவு சிக்கலான கட்டத்தை எட்டியது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில கூட்டணி தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை பாமக எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் பாமகவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

திமுக – பாமக கூட்டணி தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் திருமாவளவனின் விசிக இருக்கும் வரை அந்த கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்று பாமக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுகவை நோக்கியும் பாமக திருப்பியுள்ளது. திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதை விட அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே ராமதாஸ் விரும்புவதாக தெரிகிறது. அதே சமயம் கணிசமான தொகுதிகள், தேர்தல் செலவுக்கு பணம் என்பவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

துவக்க நிலையிலேயே தான் நேரடியாக செல்வதை தவிர்த்து தற்போது பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை முதலமைச்சரை சந்திக்க ராமதாஸ் அனுப்பி வைத்திருந்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சும் சென்று இருந்தார். வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பேசவே ஜி.கே.மணி சென்றதாக பாமக தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யவே இந்த சந்திப்பு என்கிறார்கள்.

தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்துவிட்டு வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக ஒரு உறுதியான வாக்குறுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் பட்சத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைதயை பாமக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணிக்காக பாமக ஒரு படி இறங்கி வந்திருக்கிறது என்றே கூறலாம்.

click me!