பேராசிரியையை 2-ம் தாரமாக்க சினிமா பாணியில் கடத்தல்... கட்டாய தாலி கட்ட முயன்ற அதிமுக பிரமுகர் அதிரடி நீக்கம்..!

By vinoth kumarFirst Published Oct 1, 2019, 1:01 PM IST
Highlights

திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பேராசிரியையை ஆம்புலன்சில் கடத்திய அதிமுக நிர்வாகி வணக்கம் சோமு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பேராசிரியையை ஆம்புலன்சில் கடத்திய அதிமுக நிர்வாகி வணக்கம் சோமு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி. ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (எ) வணக்கம் சோமு (40), திருமணமாகி மகள், மகன் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராகவும் உள்ளார். மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண், திருச்சியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமாகாதவர். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், சோமு அடிக்கடி அவரை பார்த்துள்ளார். 

பேராசிரியையை பார்க்கும்போது அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சோமுவுக்கு ஆசை வந்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், உறவினர்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் சோமு அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அவ்வப்போது பேராசிரியை கல்லூரிக்கு நடந்து செல்லும்போது, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பேராசிரியை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு   ஆம்புலன்ஸ் அவர் முன் நின்றது. அதில் இருந்து 4 பேர் கீழே இறங்கினர். அவர்கள் பேராசிரியையின் வாயை பொத்தி ஆம்புலன்சுக்குள் இழுத்து போட்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் பறந்தது. 

இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள், சினிமா போல சம்பவம் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி செல்வதாக கோட்டை போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. போலீசார் ஆம்புலன்சை விரட்டி சென்றனர். பின்னர், அந்த கும்பல் பயந்து பேராசிரியரை பாதி வழியிலேயே இறங்கி விட்டு தப்பித்து சென்றனர். இதனையடுத்து பேராசிரியை மீட்டு வந்தார். கடத்தி சென்ற வேனில் சோமு உள்பட 6 பேர் இருந்ததாகவும், சோமுவின் குலதெய்வ கோயிலுக்கு கொண்டு சென்று கட்டாய தாலி கட்ட ஏற்பாடு செய்திருந்ததாகவும் பேராசிரியை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோமு உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக பிரமுகரான வணக்கம் சோமுவை அனைத்து பொறுப்புகளில் இருந்து இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

click me!