ஆன்லைன் வகுப்பு எப்படி இருக்கு ? நல்லா படிக்கணும் சரியா !! - டீக்கடையில் மாணவனை ‘அசர’ வைத்த முதல்வர் ஸ்டாலின்

By Raghupati RFirst Published Jan 8, 2022, 10:13 AM IST
Highlights

கிழக்கு கடற்கரை சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் செய்த பின்னர், சிறுவனிடம் ஆன்லைன் வகுப்புகளை பற்றி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது உடல் நலனில் எப்போதுமே, மிகுந்த அக்கறை கொண்டவர். உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான பின்னரும் கடுமையான அரசியல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையேயும் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின். 

மேலும், அவ்வப்போது சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வதும் வழக்கம். வாரத்திற்கு 2 முறை சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை அதிகாலை நேரத்தில் சைக்கிளில் செல்வார். ஆனால், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், கடந்த சில வாரங்களாக அவரால் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்,அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அடிக்கடி சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல, உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். இன்று வழக்கம் போல கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். சைக்கிள் ஓட்டும்போது, அதற்கான உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

 

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த பின்னர், சிறுவனிடம் ஆன்லைன் வகுப்பு பற்றி விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! - வைரல் வீடியோ pic.twitter.com/adHsBjMLo9

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

அவர் சென்ற வழிநெடுகிலும் சாலையோரம் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்தனர். அவரும் சைக்கிள் ஓட்டியபடியே பதிலுக்கு வணக்கம் தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார். சில இடங்களில் மக்கள் கோரிக்கையை ஏற்று அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார்.

பயணத்தின்போது, மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர் கடையில் திடீரென அமர்ந்து தேநீர் அருந்தினார். தமிழகத்தின் முதல்வர் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து தேநீர் அருந்துவதை அப்பகுதி மக்கள் வந்து ஆச்சரியமாக பார்த்தனர். கூட சேர்ந்து டீ குடித்தனர். மேலும் பள்ளி மாணவன் ஒருவனிடம் பெயர்,என்ன வகுப்பு படிக்கிறாய், ஆன்லைன் வகுப்பு எப்படி இருக்கிறது என்று முதல்வர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல்,  சாதாரண மனிதராக, மக்களோடு மக்களாக பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.  இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில்  தற்போது வைரலாகி வருகிறது.

click me!