
தமிழகத்தில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் முதலமைச்சர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, ஆட்சி பொறுப்பை நிதியமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று, தற்போதைய தமிழகத்தின் ஆட்சி நிர்வாகம் நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நிலை பாதிக்ப்பபட்டு, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர் மேலும் சில நாட்கள் சிகிச்சையும், ஓய்வும் பெற வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனா.
இதனால் முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலாகா இல்லாத முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர். அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி, ஆட்சி நடத்தினார்.
அக்டோபர் 13-ந் தேதிக்கு பின்னர் எம்.ஜி.ஆர் உடல் நிலை மோசமானது, இதையடுத்து அப்போதைய ஆளுநர் எஸ்.எல்.குரானா, அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன், எம்.ஜி.ஆர். நடத்தினார்.
இதைதொடர்ந்து, அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியனிடம், முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இருந்த 14 துறைகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் நெடுஞ்செழியன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அரசை வழிநடத்துவதற்காக அமைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து தமிழக சட்டசபையை நெடுஞ்செழியன் கலைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வென்று முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, பல்வேறு சவால்களை சந்தித்து, சாதனைகளை செய்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதேபோல், 32 ஆண்டுகளுக்கு பின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், தமிழக அரசின் ஆட்சி நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.