
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் 12,600 பக்கம் கொண்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்க இரட்டை இலை சின்னத்தை மீட்டு கொடுக்க அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், இடை தரகர்கள் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். இதையொட்டி கைது செய்யப்பட்ட அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அணியினர், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என பிரமாண பத்திரம் தயார் செய்து, கொடுத்துள்ளனர்.
இதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்கனவே 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை, தொண்டர்களின் கையெழுத்துடன் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வாக்கு இயந்திரம் குளறுபடி தொடர்பான புகார்களுக்கான விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்து இருந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து அனைத்து கட்சியினரும் பங்கேற்கின்றனர்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக மற்றொரு அணியான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக அவர்கள், அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மீண்டும் 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.