ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்... எடப்பாடியின் கை ஓங்குகிறது..? எடப்பாடியாரை ஆதரிக்கும் சிட்டிங் எம்எல்ஏக்கள்!

By Asianet TamilFirst Published Oct 1, 2020, 8:24 AM IST
Highlights

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. அண்மையில் நடந்த செயற்குழுவிலும் இருவரும் காரசாரமாக விவாதம் செய்தனர். இதனையடுத்து அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தெரிவித்தார்.


இந்நிலையில் ஓபிஎஸும் இபிஎஸும் தங்களுடைய ஆதரவாளர்களைத் தொடர்ச்சியாக சந்தித்து பேசிவருகிறார்கள். எனவே, நிர்வாகிகள் இடையே முதல்வர் வேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்’ என்று பேட்டி அளித்தார். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு அளிக்கிறார் என்பது வெளிச்சமானது.
இந்நிலையில் கொங்கு பகுதியைச் சேர்ந்த பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன். என்றாலும், மீண்டும் பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தும்படி மக்கள் கேட்டுக்கொண்டார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்பதே என்னுடைய கருத்தும் ஆகும்.” என்று தெரிவித்தார். 
அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல் சீனிவாசன், நடராஜன் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளதன் மூலம், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இருப்பதாக தெரிகிறது. இவர்களைத் தொடர்ந்து 7-ம் தேதிக்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வாயைத் திறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!