இடைத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர புதிய குழு... ஆளுங்கட்சியின் அதிரடி ஏற்பாடு!

By Asianet TamilFirst Published May 7, 2019, 7:34 AM IST
Highlights

கடந்த 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வினியோகிக்க வழங்கப்பட்ட பணத்தை பலரும் சுருட்டிவிட்டதாக கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ளது. இடைத்தேர்தலிலும் இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய குழுவை நியமிக்க இருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது.
 

தமிழகத்தில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமைக்கு விசுவாசமாக நடந்துகொண்ட நிர்வாகிகளைக் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்த 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடைபெற்றதால், இடைத்தேர்தல் பாணியில் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் கஷ்டப்பட்டன. ஆனால், தற்போது  தனியாக 4 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெறுவதால், ‘வழக்கமான பாணி’யில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன.
இத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர பணம் தாராளமாகப் புரண்டோடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக ஆளும்கட்சி புதிய குழுவை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வினியோகிக்க வழங்கப்பட்ட பணத்தை பலரும் சுருட்டிவிட்டதாக கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ளது. இடைத்தேர்தலிலும் இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய குழுவை நியமிக்க இருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது.


இதன்படி 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்த வார்டில் அதிகமாக வாக்கு பதிவாகி உள்ளது என்கிற தகவல்கள் சேகரிக்கப்பட்டு கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எந்த வார்டில் கட்சியினர் தீவிரமாக உழைத்து, வினியோகித்து, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்தார்கள் போன்ற தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கிறதாம். எதையும் சுருட்டாமல் வார்டில் எந்த நிர்வாகிகள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்களோ, அவர்களை மட்டுமே நான்கு இடைத்தேர்தலில் பட்டுவாடா செய்ய கட்சி தலைமை பயன்படுத்தப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான வார்டுகளில் உள்ள நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

click me!