
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது சசிகலா கூறித்தான் என்று தம்பிதுரை கூறியிருப்பதற்கு அதிமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில், செய்தியாளர்களை திடீரென சந்தித்த அதிமுக எம்.பி.க்கள் அருண்மொழித் தேவன், திருத்தணி கோ.ஹரி, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
அதிமுகவையும் ஆட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார். பிரதமர் மோடி, கேட்டுக்கொண்டதன் பேரிலேயே ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு அதிமுக ஆதரவளித்தது.
ஆனால், சசிகலா கூறித்தான் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக ஆதரவளிப்பதாக தம்பிதுரை டெல்லியில் பேட்டி அளிக்கிறார். இது அதிமுக தொண்டர்களை, அமைச்சர்களை, நிர்வாகிகளை அவமானப்படுத்தும் செயல்.
தம்பிதுரை இவ்வாறு கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடு செயல்படுபவர் எடப்பாடி பழனிசாமி.
அம்மாவால் தொடங்கப்பட்ட இயக்கம், மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக ஆட்சியையும் கட்சியையும் எடப்பாடி தலைமையேற்று நடத்தி வருகிறார்.
தம்பிதுரையின் இந்த கருத்து, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாத கருத்தை தம்பிதுரை கூறி வருகிறார் என்று தெரிவித்தனர்.
நீங்கள் கூறும் இந்த கருத்து, எடப்பாடியின் கருத்தா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி தொண்டர்களின் கருத்து.
கடந்த 21 ஆம் தேதி முதலமைச்சர், தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டதாக தெரிவித்தார்.
அதனடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவின்படி ஜனாதிபதி தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. இது பற்றி, முதலமைச்சர் பேட்டி அளிக்கும்போதும், இந்த முடிவெடுக்கும்போதும் தம்பிதுரை பக்கத்திலேயே இருந்தார்.
அப்போதெல்லாம் வாய் திறக்காதவர், மறுநாள் 22 ஆம் தேதி டெல்லிக்கு சென்று சசிகலா கூறியதன் பேரிலேயே அனைவரும் ஆதரவு தெரிவித்ததாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது அவரது சொந்த கருத்து என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு, எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.யையும் அணுகினோம். அவர்கள் மக்கள் தலைவர்கள். தினகரன் யார்? அவரை எல்லாம் நாங்கள் பரிசீலிக்கவில்லை என்று நேற்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி அளித்ததும், இன்று சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை என்று அதிமுக எம்.பி.-க்கள் எம்.எல்.ஏ.-க்கள் பேட்டி அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.