
சட்டசபையை சுமூகமாக நடத்திச் செல்ல திமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுக அமைச்சர்கள் ரகசிய டீல் போட்டுள்ளதாக குமுறத் தொடங்கியருக்கின்றனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..
ஜெயலலிதா மறைவுக்கு முன்பு ராணுவக் கட்டுப்பாட்டுடன் கனகம்பீரமாக நடைபோட்டு வந்த அதிமுக, தற்போது பல்வேறு அணிகளாக சிதறி இருக்கிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதைப் போல ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ், டிடிவி என மூன்று அணிகளும் கட்சிக்கு நாங்கள் தான் தலைமை என்று போர்க் கொடி உயர்த்தி வருகின்றனர்.
சட்டசபையில் ஜெயலலிதா இருக்கிறார் என்றாலே அமைச்சர்கள் தொடங்கி அலுவலகப் பணியாளார் வரை அனைவருக்கும் நெஞ்சு சுடும். ஆனால் அவர் மறைந்த பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. பவ்யமாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பாயத் தொடங்கியிருக்கின்றனர்.
என் தொகுதிக்கு இதை முடிச்சுக் கொடுங்க என்று அமைச்சர்களை மிரட்டத் தொடங்கியிருக்கின்றனர். ஆரம்பத்தில் இதற்கு இதற்கு இசைவு காட்டிய, ஒரு கட்டத்தில் கடுப்பாகி, தன்மையா கேட்டா பண்ணித் தருகிறேன், தகராறு பண்ணா வாய்ப்பில்லை என்று பராமுகம் காட்டத் தொடங்கினர்.
இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை அனுசரித்து செல்லாத அமைச்சர்கள், திமுக உறுப்பினர்களை ஏகத்துக்கும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடத் தொடங்கி உள்ளதாக குமுறத் தொடங்கியிருக்கினர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
இது குறித்துப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள், “தமிழக சட்டமன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக திமுக திகழ்ந்து வருகிறது. அவர்களை முறைத்துக் கொண்டால் அவையை சுமூகமாக நடத்த முடியாது என்பது அமைச்சர்களுக்கும் அரசுக்கும் நன்றாகவத் தெரியும். அதனால் அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
“திமுக உறுப்பினர் ஒரு கோரிக்கையை முன்வைத்தால் அதிகபட்சமாக அக்கோரிக்கை மூன்று நாட்களில் நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒரு கோரிக்கையை எழுப்பினால் அதனை கிஞ்சிற்றும் கவனிக்கிறதில்லை. பள்ளி கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் திமுக முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதை கணக் கிட்டாலே நாங்கள் பேசுவது உண்மை என்று உங்களுக்குப் புரியும்.” இவ்வாறு அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.