ஜெயலலிதா பெயரை மறக்கடிக்க திட்டமா?: ஆதாரங்களுடன் வெடித்துக் கிளம்பும் அவலங்கள்...

By sathish kFirst Published Oct 11, 2018, 12:20 PM IST
Highlights

தேர்தல் காலங்களில் ஜெயலலிதாவைப் பார்த்து கருணாநிதி சற்றே அச்சம் மற்றும் கலவரம் கொள்ளும் ஒரே விஷயம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான். யாருமே எதிர்பாராத கோணங்களில், ஜனரஞ்சகமான சில விஷயங்களை மையமாக வைத்து தட்டிவிடுவார் பாருங்கள் ஒரு தேர்தல் அறிக்கையை! நாடே ‘ஆஸம்!’ சொல்லும். அதனால்தான் ஜெயலலிதாவை ‘தேர்தல் நாயகி!’ என்று அழைப்பார்கள். 

ஜெயலலிதாவை ஆட்சி அரியணையில் கொண்டு அமர வைத்ததிலும், அவரது ஆட்சியை தொடர வைத்ததிலும் இந்த தேர்தல் அறிக்கைகளின் பங்கு மிகப்பெரிது. ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், வளைந்து கொடுக்கும் தன்மையே இல்லாத பினராயி விஜயனும், தனக்கொரு பாதை தனக்கொரு பயணம்! என்றிருக்கும் சந்திரசேகர் ராவும் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் உள்ள மக்களை சுண்டி இழுக்கும் திட்டங்களைப் பார்த்து அசந்ததும், தாங்கள் முதல்வரானபின் அதை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தியதும் அரசியல் வரலாறு. பிடிவாதத்தின் மொத்த உருவமான மம்தா பானர்ஜியே இந்த விஷயத்திற்காக ஜெ., வை வானுயர பாராட்டியிருக்கிறார். 

ஆக இந்த அருமை பெருமையெல்லாம் வேற்று மாநில முதல்வர்களுக்கே தெரிந்திருக்கும் நிலையில், ‘அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்!’ என்று  நிகழும் ஆட்சியை வர்ணித்துக் கொண்டிருக்கும் எடப்பாடியார்,  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அதிகார மையத்துக்கு தெரியாமலா இருக்கும்?! அது தெரிந்திருந்தும் கூட ஜெயலலிதாவின் அதிரிபுதிரி மக்கள் திட்டங்களை அநாதைகளாக்கி தெருவில் விட்டிருக்கிறார்கள்! என்று புகார் எழுந்துள்ளதுதான் அவலமே. 

ஆம்! ஜெயலலிதா கொண்டுவந்த ஹைலைட் திட்டங்கள் அத்தனையுமே கை,கால் ஒடிந்த நிலையில் கிடப்பாதாக விமர்சகர்கள் புலம்பிக் கொட்டுகின்றனர் இப்படி...

*ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று அகில இந்தியாவையும் அழைக்க வைத்த திட்டம் ‘அம்மா உணவகம்’.  இந்த திட்டம் துவக்கப்பட்டு, கடும் நஷ்டத்தில் இயங்கியபோது ‘இதனால் வருமானம் இல்லை மேடம். கொஞ்சம் கொஞ்சமா அம்மா உணவகங்களை குறைச்சிடலாமா?’ என்று அரசு செயலர்கள் கேட்டபோது, எரித்து விடுவது போல் பார்த்த ஜெ., “சேவைக்காக நான் துவக்கிய திட்டமிது. இதில் லாப நட்டம் பார்க்க கூடாது.” என்று சொல்லி எளியோர் வயிற்றுக்கு மலிவு விலையில் உணவு கொடுத்தார். ஆனால் ஜெ., மறைவுக்கு பின் இந்த திட்டம் உயிருக்கு ஊசலாடுகிறது. ஜெயலலிதா இருந்தபோது அறுநூற்று ஐம்பத்து நான்கு அம்மா உணவகங்கள் இருந்தன. இன்று அதில் சரி பாதி கூட இயங்கவில்லை! இழுத்து மூடப்பட்டுவிட்டன. காரணம்? ‘இதை நடத்திட போதிய நிதியில்லை’ என்று சிம்பிளாக பதில் வருகிறது. 

*தமிழகத்தில் பால் உற்பத்தியில் பெரும் புரட்சி நடக்கும்! எனும் முன்னோட்டத்துடன் ‘இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்தினார் ஜெ., அவர் இருக்கும் போது தடபுடலாய் நடத்தப்பட்ட திட்டம் இது. ஆனால் இன்று காய்ஞ்ச புல்லுக்கும் வழியில்லாமல் சீவன் இழந்து செத்துக் கொண்டிருக்கிறது. ‘கிராமப்புற பெண்களுக்கு அருமையான வருவாய் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றுன  திட்டம் இது. அம்மாவோட செல்லமான திட்டத்தை சிதைச்சுட்டாங்க.’ என்று அ.தி.மு.க.வினரே அலறுமளவுக்குதான் இன்று நிலை இருக்கிறது. 

*தமிழகத்தின் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பயன்பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட, கல்வி உபகரண பொருட்கள்  வழங்குதல், இலவச மடிக்கணிணி வழங்குதல் ஆகியன இன்று இல்லவே இல்லை எனும் நிலை. பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் நிலை ஏற்படுவதை தடுக்க ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகையும் இப்போது இல்லை என்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஜெயலலிதாவை பெண்கள் கொண்டாட வைத்த ‘மாணவர்களுக்கு இல்வச சைக்கிள் வழங்கும் திட்டம்’ இன்று டெண்டர் பிரச்னைகளால் பஞ்சராகி கிடக்கிறது. 

*இது போக தாலிக்கு தங்கம், பைக் ஆம்புலன்ஸ், பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் பாதுகாப்பான தனி அறை, பெண் சிசுக்களுக்கு பெட்டகம், முதியோர் பென்ஷன்... என கிட்டத்தட்ட எல்லா திட்டங்களுமே தக்கி முக்கி தடுமாறி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. சில திட்டங்களோ முழுசாக முடிந்தே போய்விட்டன.  - இப்படி இருந்தால் இனி  வரும் தேர்தல்களில் மக்களின் அபிமானத்தை எப்படி இந்த அரசு பெறும்? ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை  இழந்து கொண்டிருக்கும் அரசாங்கம், மக்களின் வரிப்பணத்தில் செய்ய வேண்டிய இவற்றை செய்யாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?

ஆனால் அதேவேளையில் மக்களின் வரிப்பணத்தை எடுத்து தமிழகம் முழுவதும் ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’ என்று எந்த பலனுமில்லாமல் கொண்டாடியது மட்டும் எந்த வகையில் நியாயம்?

காலாகாலத்துக்கும் ஜெயலலிதாவின் பெருமையை சொல்ல வேண்டிய இந்த திட்டங்களை அநாதையாக்கியதன் மூலம் ஜெயலலிதாவையே சிறுமைப்படுத்திவிட்டது எடப்பாடி - பன்னீர் இணைந்த அ.தி.மு.க. அரசு. 

எங்களுடைய டவுட்டு என்னான்னா? “மக்கள் மனதில் ஜெயலலிதாவை வலுவாக விதை ஊன்ற வைத்த திட்டங்களை முடக்கியதன் மூலமாக, மக்கள் மனதிலிருந்து ஜெயலலிதாவை அகற்றிடும் முயற்சிக்கு இந்த அரசு துணை போகிறதோ! இது மேலிடத்து லாபியா?” என்பதுதான்.

ஜெயலலிதாவின் திட்டங்கள் முடக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதில் தரவேண்டிய அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களோ “நிதி நெருக்கடி இருந்தாலும் கூட அம்மாவின் திட்டங்களை கஷ்டப்பட்டு செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். எதிர்கட்சிகள் வீணாக வதந்தி பரப்புகிறார்கள். மக்களிடம் இது எடுபடாது.” என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறார்கள். 
அனுபவிக்கும் மக்களுக்கு தெரியாதா எது உண்மையென்று?

click me!