
பொதுக்குழு கூடி சசிகலாவை பொது செயலாளராக நியமித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் ஏன் கையெழுத்து போட்டார். இப்போது தவறு என்று கூறுவது ஏன் என மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சசிகலாவை அதிமுக, பொது செயலாளராக நியமித்தது செல்லாது என ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை கொடுத்த ஓ.பன்னீர் செல்வம், அந்த நேரத்தில் அதிமுகவில் பொருளாளராக இருந்தார் என்பதை மறந்துவிட்டரா.
அதேபோல் அவரது அணியில் முக்கிய நபராக உள்ள மதுசூதனன், அவை தலைவராக இருந்ததை மறுப்பாரா. இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.
அதிமுகவில் உள்ள அனைவரும் சேர்ந்து செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான், சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கோப்பில் ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்து போட்டுள்ளார். இப்போது அவருடன் இருப்பவர்களும் கையெழுத்து போட்டுள்ளனர்.
இப்போது, சசிகலாவை தேர்வு செய்தது செல்லாது என கூறினால், எந்த தொண்டரும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.