
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அதிமுகவினர், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகியது. பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு, பேரவை தொடங்கப்பட்டன.
தீபாவுக்கு, முன்னாள் எம்எல்ஏ திருச்சி சவுந்தர்ராஜன், ஆதரவு தெரிவித்து அரசியல் வழிமுறைகளை சுட்டிக்காட்டினார். ஆனால் தீபா, அரசியல் கட்சி தொடங்குவதில் காலம் கடத்தி வந்தார். இதனால், அவரது தொண்டர்கள் சோர்ந்து போனார்கள்.
இதற்கிடையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகள் செயல்பட தொடங்கின. தீபாவின் கட்சி தொடங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதாலும், சசிகலாவை விட்டு பிரிந்ததால், ஓ.பி.எஸ். அணிக்கு சிலர் சென்றனர். இதனால், தீபாவின் அமைப்பில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது.
இதைதொடர்ந்து, “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்ற அமைப்பை தொடங்கினார். இதையாட்டி சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணிகளுக்கு பலத்த போட்டியாக வருவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், சில சிக்கல்கள் அமைப்பை பலவீனப்படுத்த தொடங்கின.
நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி, நிதி நிர்வாகம், சுற்றுப்பயண அறிவிப்புகளில் குழப்பம் என தொடர்ந்து தீபா ஏற்படுத்திய குளறுபடிகள் சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை ஏற்படுத்தின. இந்த நிலையில் அவரது கணவர் மாதவனும் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்தது தீபாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
தீபா தற்போது கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவர் சவால்களை சமாளித்து அரசியல் களத்தில் நீடிப்பாரா? என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தீபா பேரவையில் தீவிரமாக செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி சவுந்தரராஜன், தீபாவின் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தீபா பேரவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாகவே கலைந்து விடும். இதற்கு தீபாவே காரணம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதியே தீபா அரசியலுக்கு வர வேண்டும் என முதலில் அழைப்பு விடுத்தது நான்தான். ஆனால் தீபா தொடர்ந்து தாமதித்து கொண்டே இருந்தார். இதனால், நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
எடுக்க இருக்கும் முடிவை அப்போது சொல்கிறேன், இப்போது சொல்கிறேன் என்று கூறிவந்தது தொடர்ந்து தீபாவுக்கு பின்னடைவாகவே இருந்துள்ளது.
எனவே தன்னை நம்பி தீபா பேரவைக்கு வந்தவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது. இதனால், அவரவர்கள் முடிவு செய்து எந்த கட்சியில் தொடரலாம் என்பதை தீர்மானிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.