அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுங்க... அதிமுகவில் வலுக்கும் புதிய கோஷம்!

By Asianet TamilFirst Published Jul 4, 2019, 10:16 AM IST
Highlights

வெற்றியின் விளிம்புவரை வந்து தோல்வியடைந்ததால், சந்திரசேகருக்கு மாநிலங்களவை பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் அதிமுக தலைமையை வலிறுத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், திருமாவளவனிடம் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வேட்பாளரும் பதவி கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிட்டிங் எம்.பி. சந்திரசேகர் போட்டியிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.


ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தொடக்கம் முதல்வே திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்துவந்தனர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தொடக்கம் முதலே பின்தங்கியே இருந்தனர். தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், சிதம்பரம் தொகுதியிலும் தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் திருமாவளவனுக்கு கடும் போட்டியைத் தந்தார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை மாறிமாறி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை பெற்றுவந்தார். இறுதியில் தபால் ஓட்டுகள் மூலமே திருமாவளவன் வெற்றி பெற்றார். அதுவும் வெறும் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமாவளவன் வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக கடும் போட்டி அளித்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. இதனால், அதிமுகவில் சந்திரசேகருக்கு பெயரும் கிடைத்தது. 
இந்நிலையில் அந்தக் காரணத்தை காட்டி மாநிலங்களவை பதவியை சந்திரசேகருக்கு ஒதுக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் குரல் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வெற்றியின் விளிம்புவரை வந்து தோல்வியடைந்ததால், சந்திரசேகருக்கு மாநிலங்களவை பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் அதிமுக தலைமையை வலிறுத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக சார்பில் 3 பேர் மாநிலங்களவை உறுப்பினராக ஆக முடியும். பாமகவுக்கு ஓரிடம் வழங்க அதிமுக முடிவு செய்துள்ள நிலையில், எஞ்சிய இரு இடங்களுக்கு பலத்த போட்டி நிலவிவருகிறது. தம்பிதுரை. கே.பி. முனுசாமி,. தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, மைத்ரேயன், கோகுல இந்திரா என பல அதிமுக தலைவர்கள் பதவியைப் பிடிக்க காத்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் தற்போது சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் சேர்ந்துள்ளார்.

click me!