2021-ல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்... திமுக, அதிமுகவுக்கு கூட்டணி கட்சி தலைவர் அதிரடி யோசனை!

By Asianet TamilFirst Published Nov 29, 2019, 10:23 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2021-ம் ஆண்டில் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் திமுக, அதிமுக தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்தலை 2021-ல் நடத்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறும்போது உள்ளாட்சித்  தேர்தலை நடத்த முன்வர வேண்டும். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2021-ம் ஆண்டு நடத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தனியரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் முறையாக இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக அஞ்சிய நிலையில், தற்போது திமுகவும் அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை 2021-ம் ஆண்டில் நடத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தனியரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனியரசு, “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2021-ம் ஆண்டில் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் திமுக, அதிமுக தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்தலை 2021-ல் நடத்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறும்போது உள்ளாட்சித்  தேர்தலை நடத்த முன்வர வேண்டும். தேர்தலை நடத்த ஓராண்டோ, ஒன்றரை ஆண்டோ அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.


உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்க புதிய புதிய காரணங்களை அதிமுக அரசு நீதிமன்றத்தில் முன்பு  கூறிய நிலையில், தற்போது திமுகவும் நீதிமன்றம் மூலம் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த முயன்றுவருவதாக பொதுவெளியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 2021-ம் ஆண்டில் தேர்தலை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. தனியரசு கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

click me!