குமாரசாமியின் மகனை வீழ்த்தினார் ரஜினிகாந்த் நண்பரின் மனைவி !! சுமலதா அபார வெற்றி !!

By Selvanayagam PFirst Published May 24, 2019, 8:27 AM IST
Highlights

கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்-மந்திரி குமாரசாமியின் மகனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
 

கர்நாடக மாநில நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மண்டியா தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முதலமைச்சருமான  குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து மறைந்த முன்னாள் மத்திய-மாநில அமைச்சரும், நடிகருமான அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னதாக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமலதா அம்பரீஷ் முயற்சித்து வந்தார். 

அதற்காக அவர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து டிக்கெட் கேட்டு வந்தார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீட்டின்போது மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமலதாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் சுமலதா மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இதனால் மண்டியா தொகுதி நட்சத்திர தொகுதியானது. அத்தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமிக்கும், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளையும் ஜனதா தளம்(எஸ்) கைப்பற்றி இருந்ததாலும், முதலமைச்சர் மகன் என்பதாலும் நிகில் குமாரசாமி எளிதில் வெற்றிபெற்று விடுவார் என்று கணக்கிடப்பட்டது. 

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியவுடன் சுமலதாவுக்கு ஆதரவு பெருகியது. பாஜக பகிரங்கமாக சுமலதாவுக்கு ஆதரவு அளித்தது. அதோடு மண்டியா தொகுதியில் பாஜக வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

இதற்கிடையே மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சி கைப்பற்றியதால் அங்குள்ள காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். அவர்களும் மறைமுகமாக சுமலதாவை ஆதரித்தனர். 

சுமலதா அம்பரீசுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் களம் இறங்கினர். இவற்றுக்கெல்லாம் மேலாக மைசூருவில் பிரசாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி மண்டியா தொகுதியில் சுமலதாவை வெற்றிபெற வைத்து எனது கரத்தை பலப்படுத்துங்கள் என்று பகிரங்கமாக பேசினார். பிரதமர் மோடியின் ஆதரவு சுமலதாவுக்கு மேலும் பலத்தை கூட்டியது.

இந்நிலையில்  இறுதி நிலவரப்படி சுமலதா அம்பரீஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிகில் குமாரசாமியை விட 1 லட்சத்து 25 ஆயிரத்து 876 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 

click me!